சென்னை:மத்திய சென்னை நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒருவருக்கு முக்கியமானது கல்வியாகும். நன்கு தரமான கல்வி அளித்து வரும் நவோதயா பள்ளிகள் அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆனால், மாநில அரசின் மெத்தனப் போக்கினால் தமிழகத்தில் இல்லாமல் உள்ளது. உறுதியாக, மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எல்லைப் பகுதியில் நவோதயா பள்ளிக்கூடங்கள் துவங்கப்பட்டு, ஏழை, எளிய மாணவர்கள் தரமான கல்வி கற்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்படும்.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 30 ஆயிரம் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, சுய தொழில் செய்வதற்கு ரூ. 50 ஆயிரம் முதல் 20 லட்சம் வரை முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படும். கூவம் நதியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், அதனை தூய்மைப்படுத்தி, நர்மதா நதிக்கரை போல் மாற்றி, ஏற்கனவே இருந்தது போல் போக்குவரத்து மேற்கொள்ளும் வகையில் சீரமைக்கப்படும். இதற்காக மத்திய அரசிடம் நிதி பெற்று, மாநில அரசையும் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்துவோம்.
இளைஞர்களிடம் கொடூரமான ஒரு அரக்கனாக ஆல்கஹால் மட்டும் தான் இருந்தது. அப்புறம் கஞ்சா பழக்கத்திற்கு வந்தனர். ஆனால் அதனைத் தாண்டி தற்போது போதை மாத்திரைகள் மற்றும் போதைப் பொருட்களால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல நாடுகள் போதைப் பொருட்களால் ஒரு அவசர நிலையை ஏற்படுத்தும் நிலைக்கு உள்ளது. சென்னை தலைநகருக்குள் இந்த போதைப் பழக்கம் மிக அதிகமாக உள்ளது.
குறிப்பாக, மத்திய சென்னை பகுதியில் உள்ளது. இந்த போதைப் பொருள் பழக்கத்திலிருந்து இளைஞர்களை மீட்பதற்கு 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் தரமான மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு, போதைப் பழக்கத்தில் உள்ளவர்களை மீட்டு எடுத்து அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்தப்படும்.
பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான 'டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டம்' (Target Olympic Podium Scheme) மூலமாக அதிக நிதி பெற்று மத்திய சென்னையில் உள்ள 6 சட்டமன்றங்களிலும் தரமான உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும்.
சென்னை மெரினா கடற்கரை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை முன்வைத்து, கடற்கரையைச் சுத்தம் செய்து அழகுபடுத்தி அதிகப்படியான சுற்றுலாப் பயணிகளும், சென்னைவாசிகளும் சென்று அனுபவிப்பதற்கு ஏற்ப அமைக்கப்படும். எய்ம்ஸ் தரத்தில் மருத்துவமனைகள். மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குள்ளே அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மீனவ சமுதாய மக்களுக்கு, தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விரைவுபடுத்தி தேவையான இடங்களில் மெட்ரோ ரயில் இணைப்பை அதிகரித்து, பெங்களூரு எவ்வாறு செயல்படுத்தி வருகிறதோ அதைவிடச் சிறப்பாகச் சென்னை மெட்ரோ ரயில் செயல்பட்டுப் பல இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். சென்னை விமான நிலையத்தைத் தென்னிந்தியாவின் நம்பர்.ஒன் விமான நிலையமாக மாற்றப்படும்.
இளைஞர்களுக்கு தற்போது தேவையான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்வதற்காக 6 சட்டமன்றத் தொகுதிக்குள்ளும் மையம் அமைக்கப்படும். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு தேவையான நிதிகளை வழங்கி வருகிறது. நாடாளுமன்றத்தில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விரிவுபடுத்தவும் அதற்கான நிதி அதிகரித்துத் தரவும் வலியுறுத்திப் பெற்றுத் தருவேன்.
சென்னையில் சாலைப் பணிகள் அமைக்கும் பொழுது ஏற்கனவே உள்ள சாலையை ஆழப்படுத்திவிட்டு அமைக்காமல், சாலை மேல் மீண்டும் தார்ச் சாலை அமைப்பதால் சாலை உயரமாகிறது. அதனால் அருகில் உள்ள வீடுகள் பள்ளமாகி மழை நீர் தேங்கும் அவல நிலை உள்ளது. தமிழ்நாடு அரசின் கடந்த 33 மாத செயல்பாடு பூஜ்ஜியமாக உள்ளது. மக்களுக்குத் தேவையான திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை" எனக் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க:நாடாளுமன்றத் தேர்தல் 2024: தமிழ்நாட்டில் வெற்றியை கணிக்க முடியாத 3 தொகுதிகள்? - Three Lok Sabha Constituencies