சென்னை: சிங்கப்பூரில் இருந்து தனியார் விமானம் ஒன்று சென்னை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வந்துள்ளது. அதில் வந்த பயணிகள் அனைவரும் அனைத்து சோதனைகளையும் முடித்துக் கொண்டு விமான நிலையத்திற்கு வெளியே சென்று கொண்டிருந்தனர். அப்போது, விமான நிலைய வருகை பகுதிக்கு வெளியே இரண்டு நபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
வெகுநேரமாக அவர்கள் வாக்குவாதம் செய்து கொண்டிருந்ததைக் கண்ட சென்னை விமான நிலைய போலீசார், இருவரையும் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது, இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், இருவரையும் சென்னை விமான நிலைய காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் கடலூர் மாவட்டம் கஞ்சிரன்குளத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (23), சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கலீல் அலி (34) என்பது தெரிய வந்தது. மேலும், கோவிந்தராஜ் மெக்கானிக்கல் வேலை நிமித்தமாக சிங்கப்பூர் சென்று விட்டு அங்கிருந்து சென்னை திரும்பும் போது, அங்குள்ள நபர் ஒருவர் தங்கத்தைக் கொடுத்து அதனை சென்னை விமான நிலையத்தில் கலீல் அலியிடம் கொடுக்கும்படி கொடுத்து அனுப்பி உள்ளார்.
இதையடுத்து, தங்கத்துடன் சென்னை வந்த கோவிந்தராஜ், விமான நிலையத்தில் சுங்கத்துறை சோதனையில் சிக்காமல் தங்கத்தை நைசாக கடத்தி வெளியே கொண்டு வந்துள்ளார். வெளியே வந்ததும், அந்த தங்கத்தை கோவிந்தராஜ் கலீல் அலியிடம் கொடுக்காமல், அந்தத் தங்கத்தை அபகரித்துக் கொண்டு சென்று விடுவோம் என எண்ணி, அவரின் நண்பர் ஒருவரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்ப முயன்று உள்ளார்.