சென்னை:சென்னை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளிலிருந்து தங்கம் மற்றும் விலை உயர்ந்த ஐபோன்கள் கடத்திக் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்து, சாதாரண உடையில் கடந்த சனிக்கிழமை (ஜன.18) அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்தின் வெளிப்பகுதியில் நின்று கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, துபாய் மற்றும் சிங்கப்பூரிலிருந்து வந்த 2 விமானங்களிலிருந்த பயணிகள் விமான நிலையத்திற்கு வெளியே வந்து கொண்டிருந்தனர். அப்போது தனிப்படை சுங்கத்துறை அதிகாரிகள் அந்த 2 பயணிகள் உள்பட 13 பயணிகளிடம் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி, அவர்களுடைய உடைமைகளையும் சோதனை செய்தனர்.
அப்போது அந்தப் பயணிகள் நாங்கள் ஏற்கனவே விமான நிலையத்திற்குள் சுங்கச் சோதனை அனைத்தையும் முடித்துவிட்டுத் தான் வெளியில் வருகிறோம். நீங்கள் வெளியில் நின்று கொண்டு எப்படி எங்களை மீண்டும் சோதனைக் குட்படுத்துவீர்கள் என்று கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கைது செய்யப்பட்ட அதிகாரிகள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட அறிக்கை (ETV Bharat Tamil Nadu) இதையடுத்து, தனிப்படை சுங்கத்துறை அதிகாரிகள் விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்து நிலையில் போலீசார் தனிப்படை சுங்கத்துறை அதிகாரிகள் இருக்கும் இடத்திற்குச் சென்று சோதனையைத் தொடர்ந்து நடத்தினர். அப்போது அந்த 13 பயணிகளிடம் இருந்து சுமார் ரூ.1.5 கோடி மதிப்புடைய 2 கிலோவுக்கு மேற்பட்ட தங்கப் பசைகள் மற்றும் ஐபோன்கள் இருந்ததை அதிகாரிகள் சோதனையில் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஐபோன்களுக்கு சுங்க தீர்வையும் விதித்தனர். இதையடுத்து, அந்த 13 பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க:பொங்கல் லீவ் ஓவர்.. சென்னைக்கு ரீஎன்ட்ரி கொடுத்த மக்களால் தாம்பரம் - வண்டலூரில் கடும் போக்குவரத்து நெரிசல்!
அந்த விசாரணையில் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தாங்கள் சென்னை விமான நிலையத்தில் பணியில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் சிலரின் உதவியுடன் தான் இந்த கடத்தல் பொருட்களை வெளியில் எடுத்து வந்தது கூறியதை அடுத்து அந்த 13 பயணிகளிடம் வாக்குமூலங்கள் பெற்று, உயர் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டது.
இதையடுத்து அன்று மதியம் இதில் சம்பந்தப்பட்ட சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் யார் என்பது குறித்து தனிப்படை அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர். அதில் ஜா.பரமானந்த், சரவணன் ஆதித்யன், சுனில் தேவ் சிங், டல்ஜெட் சிங் ஆகிய 4 அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, அவர்கள் உடனடியாக சென்னை சர்வதேச விமான நிலையத்தின் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, சென்னை கடற்கரை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை தலைமை அலுவலகத்திற்குக் காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த 4 அதிகாரிகள் மீதும் துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.