வேலூர்: வேலூரில் மயான கொள்ளை திருவிழா நேற்று (மார்ச் 9) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆனால், விழாவின் இறுதியில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஒருவர் மட்டும் காயமடைந்த நிலையில், அனைவரும் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்.
வேலூர் பாலாற்றங்கரையில் மயான கொள்ளை திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் விருதம்பட்டு, கழிஞ்சூர், மோட்டூர் வெண்மணி ஆகிய பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், சுமார் 60 அடி உயரம் கொண்ட 3 தேர்களில் அங்காளபரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோயிலில் இருந்து வேலூர் பாலாற்றங்கரைக்கு ஊர்வலமாக எடுத்து வந்து சூரையாடல் நடத்தினர்.
முன்னதாக இந்த மயான கொள்ளை ஊர்வலம், வேலூர் ராஜா திரையரங்கில் தொடங்கி புதிய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. அதேபோல், காட்பாடியில் தொடங்கி, விருதம்பட்டு வழியாக புதிய பேருந்து நிலையத்தில் வந்தடைந்தது. வீதிகள் வழியாக சென்று ஆங்காங்கே உள்ள மயானத்தை அடைந்தது. அங்கு மயானத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும், வழிபாடும் நடத்தி பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். மயான கொள்ளை திருவிழாவையொட்டி, நகரின் முக்கிய பகுதிகளில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சூரையாடல் முடிந்து 3 தேர்களும் புறப்படும் சமயத்தில், சுமார் 60 அடி உயரம் கொண்ட மோட்டூர் வெண்மணி பகுதியைச் சேர்ந்த தேர் அப்பகுதியில், எதிர்பாராத விதமாக சரிந்து விழுந்தது. இதில் வெண்மணி பகுதியை சேர்ந்த விமல்ராஜ் (30) என்பவர் சிக்கிக்கொண்டார். பின்னர், அவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.