டெல்லி:சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை தொடர்ந்து பரந்தூரிலும் விமான நிலைய அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க தேவையான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக காஞ்சிபுரம் வட்டம் நெல்வாய் கிராமத்தில் 69.05 ஹெக்டேர் அளவிலான நிலத்தினையும், ஸ்ரீபெரும்புதூர் வட்டம் எடையார்பாக்கம் கிராமத்தில் 67.13 ஹெக்டேர் நிலத்தினை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. முன்னதாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகமான டிட்கோ பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை உருவாக்கியது.
ஆண்டுக்கு ஒரு கோடி பயணிகளை கையாளக் கூடிய வகையில், சுமார் 32 ஆயிரத்து 704 கோடி ரூபாய் செலவில், நான்கு கட்டங்களாக இந்த விமான நிலையம் உருவாக்கப்படும் என அந்த திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க பரந்தூர், ஏகானபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 12 கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில் ஏகனாபுரம் கிராமப் பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இருந்தும் தமிழக அரசு சார்பில் அங்கு விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே டிட்கோ நிறுவனம் கடந்த 2023ஆம் ஆண்டு பரந்தூர் விமான நிலையத்தின் தள அனுமதி வேண்டி விண்ணப்பித்தது.