திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள வடக்கு அரியநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்தரன் மகன் செல்வக்குமரேசன் (வயது 38). இவர் நக்சல் தடுப்பு பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்னதாக, முக்கூடல் அருகே சுத்தமல்லி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகவும் பணியாற்றி உள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (பிப்.9) இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து அரிவாளுடன் வந்த இளைஞர்கள், வடக்கு அரியநாயகிபுரத்தில் உள்ள செல்வக்குமரேசன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், வீட்டின் கண்ணாடி உள்ளிட்டவற்றை உடைத்து சேதப்படுத்திவிட்டு, தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த முக்கூடல் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சுத்தமல்லி காவல் நிலையத்தில் தனிப்படை பிரிவு தலைமைக் காவலராக செல்வக்குமரேசன் பணியாற்றிய போது, சங்கன்திரடு பகுதியைச் சேர்ந்த முப்புடாதி என்ற நபரைக் குற்ற வழக்குகள் தொடர்பாகக் கைது செய்ததாகக் கூறப்படுகிறது.