கோயம்புத்தூர்: மருதமலை மற்றும் அதன் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் சுமார் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் நாள்தோறும் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வருவது தொடர் கதையாகி வருகிறது. குடியிருப்பு பகுதிக்குள் வரும் யானைகள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருக்கும் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு வருகிறது.
இதன் காரணமாக மருதமலை ஐஓபி காலனி உள்ளிட்ட அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ளவர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை, ஐஓபி காலனி பாலாஜி நகர் குடியிருப்புக்குள் புகுந்தது. பின்னர், அந்த ஒற்றை யானை செந்தில்குமார் என்பவரின் வீட்டின் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று சர்வ சாதாரணமாக உணவு தேடியுள்ளது. அங்கு உணவு ஏதும் இல்லாததால் மீண்டும் அருகில் உள்ள குடியிருப்பை நோக்கிச் சென்றது.