பெண்ணிடம் நகைப்பறித்த சிசிடிவி காட்சிகள் சென்னை:ஆவடி அடுத்த பட்டாபிராம், பாரதியார் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் மீனா(42). இவர் தனது மகளுக்கு மதிய உணவு வழங்க, அதே பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளிக்கு இன்று (பிப்.18) சென்றுள்ளார். அங்கு மகளுக்கு உணவு அளித்துவிட்டு, மீண்டும் வீட்டை நோக்கி பாரதியார் நகர் பிள்ளையார் கோயில் தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அவ்வழியாக எதிரில் வாகனத்தில் வந்த இருவர் அப்பெண்ணை மோதுவது போல வந்துள்ளனர்.
இதனால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ ஓரமாகச் சென்றுள்ளார். அப்பொழுது, மர்ம நபர்கள் கழுத்திலிருந்த மூன்றரை சவரன் தங்கத் தாலிச் சங்கிலியை திடீரென பறித்துச் சென்றுள்ளனர். இதனை அடுத்து, அங்கிருந்தவர்கள் பட்டாபிராம் காவல்துறைக்கு இந்த சம்பவம் தொடர்பாகத் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆய்வாளர் முருகானந்தம் தலைமையிலான காவலர்கள், அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதன்படி, சிசிடிவி காட்சிகளில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்தபடி வந்த இருவர், முன்னதாக அப்பெண் வருவதை நோட்டமிட்டுச் செல்கின்றனர்.
பின்னர், வேகமாக மீண்டும் வந்து, அப்பெண்ணை மோதுவது போல அச்சுறுத்தி, கழுத்திலிருந்த தாலிச் சங்கிலியை அறுத்துச் செல்வதும், அவர்களைச் சிறிது தூரம் துரத்திச் சென்ற அப்பெண் கூச்சலிட்டதும் பதிவாகி உள்ளது. இந்தப் பகுதியில் ஏற்கனவே இது போன்று செயின் பறிப்பு முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன எனவும், காவல்துறை உரியக் கவனம் செலுத்தி ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க:பிரியாணி கொடுத்தால்தான் பணி செய்வீர்களா? - அதிகாரிகளிடம் சரமாரி கேள்வி எழுப்பிய தருமபுரி ஆட்சியர்!