கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை இந்த வழக்கில் தொடர்புடைய 21 நபர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. அதில், மெத்தனால் சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்ட மாதேஷ் சென்னை, மாதவரம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் நிறுவனங்களிடமிருந்து சட்ட விரோதமாக மெத்தனால் வாங்கி இருப்பது தெரியவந்தது.
அதன் அடிப்படையில், இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் மாதேஷ் உட்பட சிலரை ஆறு நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மூன்று நாள் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக காவலில் எடுத்த நபர்களிடம் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் மெத்தனல் எந்தெந்த தொழிற்சாலையில் இருந்து வாங்கப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சென்னை, மாதவரம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் ஐந்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் இருந்து மெத்தனால் வாங்கியது தெரியவந்தது.