சென்னை:18வது நாடாளுமன்றத் தேர்தல், தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து, இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலிலிருந்து வருகிறது. இந்த நிலையில், அதிமுக சார்பில் அனுமதியின்றி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றதாக, கண்காணிப்பு நிலைக் குழு அதிகாரி கொடுத்த புகாரின் படி, அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை வேளச்சேரி, காந்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நேற்று (மார்ச் 23) அதிமுக சார்பில் தென்சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் ஜெயவர்தன் கலந்து கொண்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தேர்தல் விதிமுறைகளை மீறி அனுமதியின்றி கூட்டம் நடத்தியும், பொதுமக்களுக்கு இடையூறாக கொடிகளை வைத்திருந்ததாக புகார் எழுந்தது.