தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“மீண்டும் குறுக்கு விசாரணை கூடாது” - சாத்தான்குளம் வழக்கில் ஐகோர்ட் அமர்வு!

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் காவலர் ரகு கணேஷ் தாக்கல் செய்த வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

உயர்நீதிமன்ற மதுரை கிளை
உயர்நீதிமன்ற மதுரை அமர்வு (Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரை: சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் காவலர் ரகு கணேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறேன். இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், தூத்துக்குடி நீதித்துறை நடுவர் சக்திவேல் 36வது அரசு சாட்சியாக வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

என் தரப்பிலிருந்து நீதித்துறை நடுவர் சக்திவேலை குறுக்கு விசாரணை செய்ய இயலவில்லை. தற்போது நீதித்துறை நடுவர் சக்திவேலை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கக் கோரி கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். ஆனால், விசாரணை நீதிமன்றம் எனது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இது நியாயமான விசாரணையை மறுக்கும் வகையில் உள்ளது.

இதையும் படிங்க:சிதம்பரம் தீட்சிதர்கள் கடவுளை விட மேலானவர்கள் இல்லை.. ஆணவத்துடன் செயல்பட கூடாது - சென்னை ஐகோர்ட் காட்டம்!

ஆகவே, கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து நீதித்துறை நடுவர் சக்திவேலை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்த போது, சிபிஐ தரப்பில் மாஜிஸ்ட்ரேட் அளித்த சாட்சியம் 100 பக்கத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், பலமுறை வாய்ப்பளித்தும் ரகு கணேஷ் தரப்பில் குறுக்கு விசாரணை செய்யப்படவில்லை. ஆகவே, அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

ரகு கணேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டுமென வாதிட்டார். அப்பொழுது நீதிபதி 100 பக்கம் சாட்சியம் உள்ளது. இதனை எவ்வாறு குறுக்கு விசாரணை செய்வீர்கள்? திறந்த நீதிமன்றத்தில் தான் நீதிபதி சாட்சியும் அளித்துள்ளார். அவ்வாறு இருக்கும் போது மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த கேட்பது வழக்கை இழுத்து அடிப்பது போல் உள்ளது என கூறிய நீதிபதி இந்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறி தீர்ப்புக்காக வழக்கை ஒத்தி வைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details