சென்னை: தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018ஆம் ஆண்டு, சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக தியாகராய நகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாகப் புகார் அளித்தது.
இந்த புகார் தொடர்பான விசாரணையை விரைவாக முடித்து, இறுதி அறிக்கையைச் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நான்கு மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததது.
ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் போலீசார் விசாரணை முடிக்கவில்லை என ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் அதன் செயலாளரும், நடிகருமான இளவரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்களாக இருந்த ஐந்து பேர் நேரில் ஆஜராகினர். இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததற்காக நிபந்தனையற்ற மன்னிப்புகோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, காவல் ஆய்வாளர்கள் சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவை அமல்படுத்தாதது உண்மை தான் எனவும், ஆனால் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை எனக் கூறினார்.
இதனையடுத்து, பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத இரண்டு ஆய்வாளர்கள் தாங்கள் மருத்துவ விடுப்பில் சென்றிருந்ததாகத் தெரிவித்திருந்தனர். அவர்களின் மருத்துவ சான்றிதழைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் விசாரணையைப் பிப்ரவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:பதிவிறக்கத்தில் வீழ்ச்சி காணும் X தளம்.. டாப் 10-க்குள் நுழைந்த த்ரெட்ஸ் ஆப்!