கோயம்புத்தூர்:இந்தியா முழுவதும் 18வது நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் ஒரே கட்டமாக, தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ளன.
அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சேலம், கன்னியாகுமரி மற்றும் கோவையில் தொடர் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், கோவையில் (திங்கட்கிழமை) நடந்த பிரம்மாண்ட வாகன பேரணி (PM Modi Road Show) விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்த மாபெரும் ரோடு ஷோவில் பெண்கள், இளைஞர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பங்கேற்ற நிலையில், அரசு உதவி பெறும் ஸ்ரீ சாய்பாபா வித்யாலயம் பள்ளி மாணவர்களும், பள்ளி சீருடையில் இதில் பங்கேற்பதற்காக அழைத்து வரப்பட்டனர். இதையடுத்து, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்களும், குற்றச்சாட்டுகளும் வலுத்த நிலையில், விதிமுறைகளுக்கு புறம்பாக, தேர்தல் பரப்புரையில் பள்ளி மாணவர்களை பாஜக பயன்படுத்தியதாக, தலைமை தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் மற்றும் திமுகவினர் புகார் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்விற்கு பள்ளி குழந்தைகளை அழைந்து வந்த அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி நிர்வாகத்திற்கு, கோவை முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
அந்த நோட்டீஸில், "தேர்தல் பரப்புரை போன்ற செயல்பாடுகளில் குழந்தைகளை பயன்படுத்தக் கூடாது என்ற தேர்தல் விதிமுறைகளை மீறி, மாணவர்களை அழைத்துச் சென்றுள்ளதாக ஊடகங்களின் வழியாக தெரியவந்துள்ளது" என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் ரோடு ஷோ நிகழ்விற்கு அழைத்து சென்றதையடுத்து, பள்ளி நிர்வாகத்தின் மீது கோவை மாநகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி நேற்று பள்ளியில் ஆய்வு செய்த நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பிரதமர் மோடி ரோட் ஷோ.. திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார்!