தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலிஃபிளவரில் கஞ்சா கடத்தி வந்த பெண்.. செக் வைத்த மோப்ப நாய் - விமான நிலையத்தில் பரபரப்பு! - CHENNAI AIRPORT DRUG SEIZED

சென்னை விமான நிலையத்திற்கு காலிஃபிளவரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள உயர்ரக கஞ்சாவை மறைத்து வைத்து கடத்தி வந்த பெண்ணை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

விமானம், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவுடன் மோப்ப நாய்
விமானம், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவுடன் மோப்ப நாய் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2025, 7:21 AM IST

சென்னை:வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமான பயணிகள் போதைப் பொருட்கள் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்தஇரண்டு நாட்களுக்கு (டிச.31) முன் தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னை விமான நிலையம் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் இருந்து வெளியேறிய பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது சுமார் 25 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக தோன்றிய நிலையில், சுங்கத்துறை அதிகாரிகள் அப்பெண் பயணியை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவுடன் மோப்ப நாய் (Credits- ETV Bharat Tamil Nadu)

அப்போது, அப்பெண் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். மேலும் அவரின் உடைமையில் வெறும் காலிஃபிளவர் (Cauliflower) மட்டும் உள்ளதாகக் கூறியதால், மேலும் சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் மோப்ப நாய்களை வரவழைத்து சோதனை நடத்தினர். சோதனையில் அந்த பெண் பயணியின் உடைமையை மோப்பம் பிடித்து மோப்பநாய் தரையில் அமர்ந்து குறைக்கத் தொடங்கியுள்ளது. அதனால், சுங்கத்துறை அதிகாரிகள் பெண் பயணியின் உடைமையைப் பிரித்துப் பார்த்து சோதனை செய்துள்ளனர்.

இதையும் படிங்க:போதைப்பொருள் விற்பனை வழக்கு: மேலும் மூவர் கைது! மூலப் பொருட்கள் பறிமுதல்!

அப்போது, அதற்குள் 14 பார்சல்களில் காலிஃபிளவர் மற்றும் மஸ்ரூம் இருந்துள்ளது. அதனை சுங்கத்துறை அதிகாரிகள் கையில் எடுத்துப் பார்த்தபோது, காலிஃபிளவர் மற்றும் மஸ்ரூம் இடையே ஹைட்ரோபோனிக் எனப்படும் உயர்ரக பதப்படுத்தப்பட்ட கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. அப்போது, அந்த பெண் கொண்டு வந்த 14 பார்சல்களிலும் இருந்து சுமார் 6 கிலோ ஹைட்ரோபோனிக் எனப்படும் பதப்படுத்தப்பட்ட உயிர்ரக கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கடத்தி வந்த பெண் யார்? சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் இவருக்கும் தொடர்புள்ளதா? இவர் யாருக்காக கஞ்சாவை கடத்தி வந்தார்? யாரிடமிருந்து கஞ்சாவை வாங்கி வந்தார்? போன்ற பல்வேறு கோணங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details