தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனடாவில் காலை உணவுத் திட்டம் அறிமுகம்.. பெருமிதம் தெரிவிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ! - canada Breakfast Scheme - CANADA BREAKFAST SCHEME

Canada Breakfast Scheme: தமிழகத்தை போல கனடா நாட்டிலும் பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவுத்திட்டம் அறிமுகப்படுத்த உள்ளதாகக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஜஸ்டின் ட்ரூடோ
mk stalin

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 2, 2024, 6:29 PM IST

சென்னை: கனடா நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்குத் தேசிய காலை உணவுத் திட்டத்தினை அறிமுகம் செய்து வைக்கப்போகிறோம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவுத் திட்டமாக அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் வெகுசிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் 2022ஆம் ஆண்டு சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ், “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும். நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும், பள்ளிக்குச் செல்லக் கூடிய குழந்தைகள் காலையில் புறப்பட்டு விடுகிறார்கள்.

இதனால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை. எனவே, ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலையில் சிற்றுண்டி வழங்கப்படும்” என்று அறிவித்தார்கள்.

இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15, 2022ல் முதலமைச்சர் இத்திட்டத்தினை மதுரையில் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, 2023 ஆகஸ்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த திருக்குவளை கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கி மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை விரிவுபடுத்தினார்.

இத்திட்டத்தின் மூலமாக 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 17 இலட்சம் குழந்தைகள் நாள்தோறும் காலை உணவு உண்டு, சிறப்பாகக் கல்வி பயின்று வருகிறார்கள். இத்திட்டத்தின் சிறப்புகளை, தெலங்கானா மாநில அரசு அறிந்து, தமிழ்நாட்டிற்கு வருகைபுரிந்து காலை உணவு திட்டம் குறித்து நேரில் பார்வையிட்டு தமிழ்நாடு இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துகிறது. தெலங்கானா மாநிலத்திலும் இந்தக் காலை உணவு திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறிச் சென்றனர். அதன்படி, தெலங்கானா மாநிலத்திலும் தற்போது காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தக் காலை உணவுத் திட்டம் இந்தியா முழுவதும் புகழடைந்து வரும் நிலையில், தற்போது இந்தியாவைக் கடந்து வெளிநாடுகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய காலை உணவுத் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கனடாவில் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது X தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கனடா நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்குத் தேசிய உணவுத் திட்டத்தினை அறிமுகம் செய்து வைக்கப்போகிறோம். குழந்தைகள் நன்கு கற்க, அவர்கள் வயிறார சாப்பிட்டுவிட்டு வகுப்பறைக்குச் செல்லவேண்டும். கனடாவின் புதிய தேசிய பள்ளி உணவுத் திட்டம், குழந்தைகள் பசியுடன் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்யும். மேலும் ஒவ்வொரு மாணவரும் அவர்களின் கற்றல் திறனை சிறந்த முறையில் மேம்படுத்த இது பெரிதளவில் உதவும் என நம்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் தொடங்கிய காலை உணவுத் திட்டம் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மட்டுமல்லாமல், தற்போது வெளிநாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படுவது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகும் என திமுகவினர் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க:திமுக Vs பாஜக என மாறுகிறதா தேர்தல் களம்? - உண்மை நிலவரம் என்ன? - DMK VS BJP

ABOUT THE AUTHOR

...view details