புதுடெல்லி:டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் டெல்லியில் இன்று அறிவித்தது. அப்போது, தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இங்கு பிப்ரவரி 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 10-ம் தேதி மனு தாக்கல் தொடங்குகிறது. பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
4 ஆண்டுகளுக்குள் 3வது முறையாக தேர்தலை சந்திக்கும் ஈரோடு கிழக்கு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முக்கியத் தொகுதிகளில் ஒன்று ஈரோடு கிழக்கு. திராவிட பேராசான் தந்தை பெரியார் பிறந்த மண் ஈரோடு. இது தொகுதி மறுவரையறைகளின்கீழ் கடந்த 2008-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த தொகுதியில் ஈரோடு மாநகர் மற்றும் தாலுகா பகுதிகள் உள்ளன.
இந்திய தேர்தல் வரலாற்றிலேயே, 5 ஆண்டுகளுக்குள் 3-வது முறையாக தேர்தலை சந்திக்கும் தொகுதி ஈரோடு கிழக்கு ஆகும். கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டது. தந்தை பெரியாரின் சகோதரர் சம்பத்தின் பேரனும், முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவேரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் அதிமுக கூட்டணியில் தமாகா சார்பில் போட்டியிட்ட யுவராஜாவை விட 8904 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
ஆனால், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி திருமகன் ஈவேரா உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 46. இதனையடுத்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த முறையும், தொகுதியை காங்கிரஸுக்கே கொடுத்தது திமுக. அப்போது, காங்கிரஸ் சார்பில் மறைந்த திருமகன் ஈவேராவின் தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டார்.