திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் விஜயவாடாவைச் சேர்ந்த தொழிலதிபர் சாம்பசிவ ராவ் மூன்றரை கிலோ எடை கொண்ட தங்க நகைகளை அணிந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளார். இது குறித்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோயிலுக்கு திருவண்ணாமலை மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வர்.
இந்நிலையில் இன்று (ஜனவரி 20) திங்கட்கிழமை காலை அண்ணாமலையார் கோயிலுக்கு, ஆந்திரா மாநிலம் விஜயவாடா பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சாம்பசிவ ராவ் சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்துள்ளார். அப்போது அவர், சுமார் மூன்றரை கிலோ எடை கொண்ட தங்க செயின்கள், மோதிரம், பிரேஸ்லெட் அணிந்து சாமி தரிசனம் செய்துள்ளார்.