சென்னை: சென்னை திருமங்கலம் பகுதியில் தனியார் மால் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் மாலுக்கு தினந்தோறும் ஆயிரத்துக்கும்ம் மேற்பட்டோர் வந்து செல்வர். அதேபோல், இன்றும் இந்தத் தனியார் மாலுக்கு ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்துள்ளனர். இந்த நிலையில், இன்று(ஏப்.23) காவல் கட்டுப்பட்டு அறைக்கு, இந்தத் தனியார் மாலில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக இமெயில் மூலம் மிரட்டல் ஒன்று வந்துள்ளது.
அதன் அடிப்படையில், கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் மால் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாலின் உள்ளே அதிகப்படியான பொதுமக்கள் இருப்பதால், அவர்களைப் பத்திரமாக அப்புறப்படுத்தும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மாலில் உள்ள உணவகம், திரையரங்கம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மோப்பநாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே, சென்னையில் தனியார் பள்ளிகள் மற்றும் கோயிலுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் விசாரணையில், அந்த மிரட்டல் சம்பவங்கள் புரளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடும் நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இமெயில் மூலம் தனியார் மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:இறுதிக்கட்ட படப்பிடிப்பில் 'பேபி & பேபி' திரைப்படம்! - Baby And Baby Movie