தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொல்கத்தா ஏர்போர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: சென்னை ஏர்போர்ட்டில் 5 பாதுகாப்பு - security tight at chennai airport - SECURITY TIGHT AT CHENNAI AIRPORT

Chennai Airport: கொல்கத்தா விமான நிலையம் உள்ளிட்ட 4 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், சென்னை விமான நிலையத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம்
Chennai Airport

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 27, 2024, 9:23 AM IST

சென்னை: கொல்கத்தா உட்பட இந்தியாவில் உள்ள 4 விமான நிலையங்களில், இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் சென்னை விமான நிலையத்தில் நேற்று பிற்பகலில் இருந்து 5 அடுக்கு பாதுக்காப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொல்கத்தா விமான நிலையத்தின் மேலாளருக்கு, நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் தொலைபேசியில் பேசிய மர்ம நபர் ஒருவர், கொல்கத்தா உள்ளிட்ட, இந்தியாவின் 4 விமான நிலையங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்துள்ளார். இந்தியில் பேசிய அந்த நபர் உடனடியாக இணைப்பை துண்டித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால், கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து அதிகாரிகள் டெல்லியில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் விமான போக்குவரத்து பாதுகாப்பு துறை ஒன்றாக இணைந்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியதோடு, பயணிகள் மற்றும் விமானங்களில் ஏற்றப்படும் பார்சல்கள் ஆகியவற்றை தீவிரமாக கண்காணித்து, பரிசோதிக்க உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, சென்னை விமான நிலையத்திலும் நேற்று பிற்பகலில் இருந்து, தீவிர கண்காணிப்பு சோதனை நடைபெற்றது. சென்னை விமான நிலையத்தில் வழக்கமாக உள்ள மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் நேற்று பிற்பகலில் இருந்து 5 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, சென்னை உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களில் இருந்து, விமானங்களில் பயணிக்க வரும் அனைத்து பயணிகளையும் தீவிரமாக கண்காணித்து, சோதனைகள் நடத்தி வருகின்றனர். மேலும் விமானத்தில் ஏற்ற வருகின்ற பயணிகளின் உடைமைகள், பார்சல்கள் அனைத்தும் முழுமையாக பரிசோதிக்கப்படுகின்றன.

ஆனால், இதுவரை இந்த சோதனைகளில் எந்தவிதமான பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் டெல்லியில் இருந்து மறு உத்தரவு வரும் வரையில் இந்த சோதனைகள் அனைத்தும் தொடர்ந்து நடைபெறும் என்று கூறப்படுகிறது, பயணிகளுக்கு கூடுதல் சோதனைகள் நடப்பதால், சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான பயணிகள், விமானம் புறப்படும் நேரத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சர்வதேச விமான பயணிகள் 3 மணி நேரம் முன்னதாகவும் விமான நிலையத்திற்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:2ஆம் கட்ட மக்களவை தேர்தல்: கேரளாவில் மூக்கு மூலம் வாக்களித்த மாற்றுத்திறனாளி இளைஞர்! - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details