தூத்துக்குடி: சாத்தான் குளம் அருகே உள்ள கடாச்சபுரம் சண்முகபுரத்தை சேர்ந்தவர் இசக்கி பாண்டி மகன் சுந்தர் (30). இவர் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள அவரது உறவினர் கடையில் வேலை பார்த்து வந்த நிலையில், கோயில் திருவிழாவில் பங்கேற்பதற்காக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
கடந்த சனிக்கிழமை கபடி போட்டியை பார்ப்பதற்காக அருகில் உள்ள பன்னம்பாறை கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் பன்னம்பாறை சுப்பராயபுரம் இடையே உள்ள சாஸ்தா கோயில் வளாகத்தில் அவர் தூக்கிட்டு இறந்து கிடந்தது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற சாத்தான்குளம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் சுந்தர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை அடித்து கொலை செய்திருக்கலாம் எனவும் தெரிவித்து, அவரது உறவினர்கள் சாத்தான்குளம் பழைய பஸ் நிலையம் காமராஜ் சிலை முன்பு இறந்த உடலை வாங்க மறுத்து சாலை மறியல் செய்ய போவதாக கூறினர். இதனை அறிந்த சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் யேசு ராஜசேகரன் எஸ்.ஐ. எட்வின் அருள்ராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.