சென்னை: மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை நேற்று (அக்.6) சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கண்டு களித்தனர். சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில், மெரினாவில் குவிந்தவர்களில் பலருக்கு நீர் சத்து குறைவால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. குடிக்க நீரின்றி, ஒதுங்க நிழலின்றி, பல பேர் கடும் நெரிசலுக்கு மத்தியில் வீடு போய் சேர்ந்தனர். இதற்கிடையே, மயங்கி விழுந்த 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அவர்களில், திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திகேயன் (34), பெருங்களத்தூரைச் சேர்ந்த சீனிவாசன் (48), சென்னை மடுவங்கரை பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார் (40), கொருக்குப்பேட்டை ஜான் (56), திருவல்லிக்கேணியைச் சேர்ந்த மணி (55) ஆகிய 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை மாநகரை சோகத்தில் ஆழ்த்தியுள்ள இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, திமுக அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.