தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜக தனித்து நிற்க தயாராக உள்ளது என்று தெரிவித்த அவர், அதேபோல் காங்கிரஸ் கட்சியும் தனித்து நிற்க தயாராக உள்ளதா என்றும், முதலில் 234 தொகுதிகளில் நிற்பதற்கு காங்கிரஸ் கட்சியில் ஆட்கள் உள்ளனரா எனக் கேள்வி எழுப்பினார்.
கருப்பு முருகானந்தம் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu) திமுகவின் முதுகில் ஏறி சவாரி செய்வது காங்கிரஸ் கட்சி என்று விமர்சித்தார். மேலும், நீங்கள் விமர்சனம் செய்வதற்கு அண்ணாமலை என்பவர் தனிப்பட்ட நபர் அல்ல என எச்சரித்தார். காங்கிரஸ் கட்சி தற்பொழுது பல போராட்டம் நடத்துகிறது என்றும், இதேபோல் கொடும்பாவி எரிப்பு, ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டம் நடத்த தாங்களும் தயாராக உள்ளதாக எச்சரித்தார்.
மேலும், மீனவர்கள் பிரச்னை ஏற்பட காரணம் கச்சத்தீவை தாரை வார்த்த காங்கிரஸ், திமுக கட்சிதான் என்று குற்றம் சாட்டினார். ஆனால், இதைப் பற்றி காங்கிரஸினர் யாரும் பேச மறுப்பதாக தெரிவித்தார். பாஜக மோடி ஆட்சி வந்த பிறகு மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்றும், மேலும் ஆங்காங்கே மீனவர்கள் கைது செய்வதை நிறுத்துவதற்கான முயற்சிகள் எடுப்போம் என உறுதியளித்தார்.
திருவாரூர் மாவட்டம் தலையாமங்கலத்தில் உட்கட்சி பிரச்னையின் காரணமாக பயங்கர ஆயுதங்கள் வைத்துக்கொண்டு வந்தவர்களில் வாகனங்கள் மட்டுமே கைப்பற்றப்பட்டிருக்கிறது. ஆனால், வாகனங்களில் வந்தவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார். காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், ஆளுங்கட்சியின் அடியாட்களாக காவல்துறை செயல்படுகிறது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "முன்விரோத கொலைகளுக்கும் சட்டஒழுங்கிற்கும் சம்பந்தம் இல்லை" - துரைமுருகன் பேட்டி!