கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதிக்கான வாக்குறுதிகளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பொதுமக்களுடன் இணைந்து வெளியிட்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது என்று தான் விதிமுறை உள்ளது. வேட்பாளர் பொதுமக்களை இரவு 10 மணிக்கு மேல் சந்திக்கக் கூடாது என்று எந்த விதியும் இல்லை. சரியான நேரத்தில் செல்ல முடியவில்லை என்றால் மைக்கை அணைத்துவிட்டுக் கைகுலுக்கி, வணக்கம் சொல்லிவிட்டு வருவது வழக்கம்.
அனுமதிக்கப்பட்ட இடங்களில் கடைசி பாய்ண்டுகள் செல்வதற்கு லேட் ஆகி விடுகிறது. காவல்துறை அனுமதி கொடுத்த இடத்துக்குத் தான் சென்றிருக்கிறோம். இந்தியா முழுவதும் பிரதமர் மோடி கூட இரவு 10 மணிக்கு மேல் மேடைக்குச் சென்று மக்கள் முன்பு, சாஷ்டாங்கமாக மன்னிப்பு கேட்ட வரலாறு எல்லாம் உண்டு. நான் இரவு 10 மணிக்கு மேல் மைக்கில் பேசிய வீடியோவை காவல்துறையை வெளியிட வேண்டியது தானே?
திமுக காரர்கள் எப்பவும் கையில் கட்டுப் போட்டுக்கொண்டு மருத்துவமனையில் போய் படுப்பது வழக்கம் தான். இது ஒன்றும் புதிது கிடையாது. திமுகவிற்குக் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் டெபாசிட் கிடைக்காது.
கோவை நாடாளுமன்றத் தொகுதியில் இவ்வளவு எழுச்சி ஏற்பட்டுள்ளது.
ஆளும்கட்சியிடம் அனைத்து பவரும் இருக்கிறது. பாஜகவினர் அடித்தார்கள் என்று சொல்வது காதில் பூ சுற்றுவதைப் போன்று இருக்கிறது. வன்முறையும், அட்டகாசமும் செய்வதற்கு என்று பிறந்த கட்சி திமுக. 10 மணிக்கு மேல் அண்ணாமலை பிரச்சாரம் செய்த வீடியோ எங்கே?
பொதுமக்கள் நான்கு மணி நேரத்துக்கு மேலாக காத்திருக்கிறார்கள். நான் அவர்களிடம் பேசாமல் எப்படி போக முடியும்? திருப்பூரில் ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை பாஜகவினர் மிரட்டிய வீடியோ வைரலானது குறித்த கேள்விக்கு, அதை நான் பார்க்கவில்லை.
திமுக முதன்முதலாகத் தமிழகத்தில் டெபாசிட் இழக்கக் கூடிய தொகுதி கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி. எழுதி வைத்துக் கொள்ளுங்கள். வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்த மூன்று அல்லது நான்கு சுற்றுகளிலேயே தெரிந்து விடும். திமுக டெபாசிட் வாங்க மாட்டார்கள் என்பது. அந்த அளவு வெறுப்பைச் சம்பாதித்து இருக்கின்றனர்.
10 மணிக்கு மேல் ஏற்கனவே திட்டமிடப்பட்ட பகுதிகளில் ஒலிபெருக்கி இல்லாமல் வணக்கம் சொல்லிவிட்டு வேட்பாளர் போகலாம். இது தமிழகம் முழுவதும் பொருந்தும். அனுமதி பெற்ற இடத்தை தாண்டி வேறு இடத்திற்குச் செல்லக்கூடாது. 10 மணிக்கு மேல் எங்கும் பிரச்சாரம் செய்யவில்லை. மக்களிடம் மன்னிப்பு தான் கேட்டுக்கொண்டேன்.
பாஜக கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக, திமுக குற்றம் சாட்டி இருப்பது குறித்து கேள்விக்கு, திமுக தனது தோல்வியை இப்பொழுதே ஒப்புக் கொண்டிருக்கின்றனர். ஏப்ரல் 19 வரை அவர்கள் காத்துக் கொண்டிருக்கத் தயாராக இல்லை.
திமுகவிற்கும், அதிமுகவுக்கும் தான் தேர்தல் போட்டி எனச் சொல்லப்படுவது குறித்த கேள்விக்கு, தேர்தல் முடிவுக்குப் பின்னர் பார்க்கலாம். ஸ்மார்ட் சிட்டி தொடர்பாக இதுவரை சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டதாகத் தெரியவில்லை என்ற கேள்விக்கு, எழுப்பும் போது எழுப்புவோம். வானதி சீனிவாசன் குறுக்கிட்டு, ஸ்மார்ட் சிட்டி குறித்து சட்டமன்றத்தில் பலமுறை கேள்வி எழுப்பி இருக்கிறேன். வேண்டுமென்று கேட்கின்றீர்களா?
ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடக்காதது குறித்து தான் கேள்வி எழுப்பி இருக்கிறீர்கள். ஸ்மார்ட் சிட்டி ஊழல் குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறீர்களா? அதற்கு வானதி சீனிவாசன், மாநிலத் தலைவர் பதில் சொல்லுவார்.
இன்று எங்களுடைய நிலைப்பாடு சரியாக இருக்கிறது. ஊடகவியலாளர்கள் கேட்கும் கேள்விகளில் அறம் இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். அண்ணாமலைக்கு ஒரு நியாயம், திமுகவிற்கு ஒரு நியாயம் என இருக்கக் கூடாது. அறத்துடன் கேள்வி கேட்க வேண்டும். நியாயமாகக் கேளுங்கள்.
இரு ஆண்டுகளில் எத்தனை முறை பெட்ரோல், டீசல் விலை குறைத்து இருக்கின்றது என்ற கேள்விக்கு, கூகுள் இருக்கின்றது அதில் பாருங்கள். இரண்டு வருடத்துக்கு முன்னாடி தீபாவளிக்கு பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்தது.
இரண்டு ஆண்டு இல்லை. போன தீபாவளிக்கு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வில்லையா? மத்திய அரசின் பாஜக தேர்தல் அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம். இங்கிருந்து சில தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது. அது வந்தவுடன் மாநில பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.
என் மீது வழக்குப் போடப்பட்டது குறித்து நான் நீதிமன்றத்திற்குச் செல்லப் போவதில்லை. உயர்நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. இரவு 10 மணிக்கு மீது நான் பிரச்சாரம் செய்ததை காவல்துறை தான் நிரூபிக்க வேண்டும்.
பாஜக தோல்வி பயத்தில் வெளி மாநிலத்திலிருந்து ஆட்களை இறக்கி இருப்பதாக திமுக வேட்பாளர்கள் குற்றம் சாட்டியது குறித்த கேள்விக்கு, நான் அப்படி வெளி மாநில ஆட்கள் யாரையும் பார்த்ததில்லை. நீங்கள் யாரையாவது பார்த்திருக்கிறீர்களா? எனக் கேள்வி எழுப்பினர்.
கோவை நகரில் சூயஸ் திட்டம் குறித்துத் தேர்தல் அறிக்கையில் எதுவும் சொல்லப்படவில்லையே என்ற கேள்விக்கு, நாங்கள் அது குறித்து விரிவாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். எங்களைப் பொருத்தவரை தேர்தல் நடத்தப்பட வேண்டும். கோவையில் தங்கச் சுரங்கத்தையே கொட்டினாலும் பாஜக வெற்றி பெறுவது உறுதி. தேர்தலை நிறுத்துங்கள் என்று நாங்கள் பெட்டிசன் கொடுக்கப் போவதில்லை. திமுக என்ன செய்தாலும் அதை பாஜக தொண்டன் தாங்குவான்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா நிகழ்வு தமிழகத்தில் மூன்று இடத்தில் இருக்கிறது. சிவகங்கைக்கு வருகிறார். அங்கு சிறு நிகழ்வில் பங்கேற்கிறார். அதன் பின்னர் மதுரை ரோடு ஷோவில் பங்கேற்கிறார். அதன் பின்னர் கன்னியாகுமரி, விருதுநகர் சென்று விட்டு திருவனந்தபுரம் செல்கின்றார். அமித்ஷா நிகழ்வு இப்பொழுது கோவையில் இல்லை எனத் தெரிவித்தார்.
பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் முக்கிய சில திட்டங்கள்:
- கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில், நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டு மக்கள் குறை தீர்ப்பு மையமாகச் செயல்படும்.
- கோவை விமான நிலையத்தை, உலகத் தரத்திற்கு விரிவாக்கம் செய்து சர்வதேச விமான முனையமாக மேம்படுத்தப்படும். கோவை மெட்ரோ திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
- தமிழகத்தில் இரண்டாவது Indian Institute of Management (IIM) கோவையில் நிறுவப்படும்.
- விவசாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆனைமலை - நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும்.
- கோவையின் ஜீவநதியாக இருக்கும் நொய்யல் நதி மற்றும் அதன் கிளை நதியான கௌசிகா நதிகளை மீட்டெடுத்து கோவையின் நீர்வளம் மேம்படுத்தப்படும்.
- விசைத்தறி உரிமையாளர்கள் பயன்பெறும் வண்ணம் பவர் டெக்ஸ் திட்டம் மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்படும். பவர் டெக்ஸ் திட்டத்தின் கீழ் சூரிய மின் தகடுகள் அமைக்க மற்றும் சாதாரண விசைத்தறிகளை நாடா இல்லாத விசைத்தறிகளாக மாற்ற வழங்கப்படும் மானிய தொகை உயர்த்தி வழங்கப்படும்.
- கோவையில் NIA மற்றும் NCB கிளை அலுவலகங்கள் அமைக்கப்படும்.
- கோவையில் Automotive Corridor அமைக்கப்படும். கோவை Defence Corridor-ல் செமிகண்டக்டர்களை தயாரிக்கப் பாதுகாப்பு அமைச்சகத்திடம் வலியுறுத்தப்படும்.
- நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் 4 நவோதயா பள்ளிகளின் பயிற்சிகள் கிடைப்பதை உறுதி செய்ய வழிவகை செய்யப்படும்.
- கோவை நாடாளுமன்றத் தொகுதியில் 250 மக்கள் மருந்தகங்கள் செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்.
- வயோதிகர்களுக்கு உடல் ரீதியான மற்றும் உளவியல் ரீதியான சிறப்பு மருத்துவ தேவையைப் பூர்த்தி செய்யக் கோவையில் உலகத்தரம் வாய்ந்த தேசிய முதியோர் நல மருத்துவ மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
- நாடு முழுவதும் உள்ள புராதனமான ஆன்மீக தலங்களுக்குக் கோவையிலிருந்து 10 புதிய ரயில்கள் இயக்கப்படும். சபரிமலை யாத்திரையை ஒருங்கிணைக்க உதவி மையம் அமைக்கப்படும்.
- கொங்கு மண்டலத்தில் மத்திய அரசின் உதவியோடு உயர் தரப் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை நிறுவப்படும். ஆயுஷ்மான் பாரத் திட்டப் பயனாளிகளுக்கு இம்மருத்துவமனையில் இலவச சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- கர்மவீரர் காமராஜரின் நினைவாக, அரசு மற்றும் தனியார் பங்களிப்போடு கோவை மாநகரில் 3 Food Bank (உணவகம்) நிறுவப்படும்.
இதையும் படிங்க:"தேர்தல் புத்தகத்தின் அடிப்படையில் நாதக சின்னம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒட்டப்பட்டுள்ளது" - சத்யபிரதா சாகு! - Tamilnadu Chief Electoral Officer