திருப்பூர்:கணக்கம்பாளையத்தில் பாஜக தமிழக அளவிலான மாவட்ட தலைவர்கள் மற்றும் ஒன்றிய தலைவர்கள் அணி பிரிவு மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக மேற்பார்வையாளர் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
அண்ணாமலை பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) கூட்டத்தில், தான் அரசியல் சார் படிப்பு படிப்பதற்காக லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு செல்வதால் அடுத்த மூன்று மாதம் விடுமுறை எனவும், இதனால் கேசவ விநாயகம் மாநில தலைமை பொறுப்பை கவனிப்பார் என்றும் அண்ணாமலை கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது, “பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் இன்று மரக்கன்று நடப்பட்டு வருகிறது. 78 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் வருகிற 13, 14 மற்றும் 15ம் தேதிகளில் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற மோடி வலியுறுத்தி உள்ளார்.
நாடு முழுவதும் இந்த பேரணி நடக்கிறது. ஆனால், திருப்பூரில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.திமுகவுக்கு தேசியக்கொடி என்றாலே பிரச்னைதான். பேரணியில் பாஜக கொடி இருக்காது. கட்சி பேரணி கிடையாது. தன்னார்வலர்கள் கலந்து கொள்கின்றனர். தேசியக்கொடி, தங்களுக்கு பிடிக்காது என்பதை திமுக எப்படியெல்லாம் காட்டுகிறார்கள்.
இந்த நாட்டின் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு தான் முதலமைச்சராக இருக்கிறார். தனியாக, ஜப்பான் சட்டத்தின்படி தமிழக முதலமைச்சராக இருக்கிறாரா? இந்தியாவின் அரசியலமைப்பு சட்டப்படிதான் தலைவராக இருக்கிறார். முதலமைச்சர் செய்ய வேண்டிய வேலையை தனி மனிதர்களாக நாங்கள் செய்கிறோம். இதற்கு அவர்கள் வெறுப்பு காட்டுகின்றனர்.
முதலீட்டாளர்களை பீதியில் ஆழ்த்தும் வகையில், செய்தியை வெளியிட்டு பங்குச்சந்தையில் ஆயிரக்கணக்கான கோடியில் ஹிண்டன்பர்க் லாபம் பார்க்கிறது. ஒரு பங்கு விலை இறங்குவதை முன்கூட்டியே கணித்து அதனை விற்று லாபம் பார்க்கிறது இந்த நிறுவனம். உலகளவில் முக்கிய நிறுவனங்களை குறிவைத்து பல கோடி சம்பாதிப்பதே ஹிண்டன்பர்க் நோக்கம். ஹிண்டன்பர்க் நிறுவனம் ‘செபி’ தலைவர் மீது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. அதை அலட்சியமாக எடுத்து கொள்ளாமல் ஒன்றிய அரசு விசாரணைக்கு எடுத்து கொள்ளும்" என்று அண்ணாமலை கூறினார்.
இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், காந்தி, சி.ஆர்.சரஸ்வதி, பாஜக முக்கிய தலைவர்களான எச்.ராஜா, சரத்குமார், முருகானந்தம், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் 66 மாவட்ட தலைவர், 1216 மண்டல் தலைவர், 180 மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க:கும்பகோணத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டி..உற்சாகமாக பங்கேற்ற இளம்பெண்கள்!