திருநெல்வேலி: நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், அதிமுக சார்பில் ஜான்சி ராணி, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் சத்யா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனால், நெல்லையில் நான்கு முனை போட்டி உருவாகியுள்ளது.
இந்த நிலையில், கடந்த வாரம் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் அலுவலகத்தில், தேர்தல் அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை இணைந்து நடத்திய சோதனையில், பல லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நெல்லையைச் சேர்ந்த பிரபல அரசு ஒப்பந்ததாரரான ஆர்.எஸ்.முருகன் அலுவலகத்தில், தொடர்ச்சியாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் பாஜக உறுப்பினர் உள்பட 3 பேரிடம் சுமார் நான்கு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமான நபர்களிடம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொடர்ச்சியாக சோதனை நடத்தப்பட்டது.
இதன் காரணமாக, நெல்லை தேர்தல் களம் பரபரப்பான நிலையில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரி, திமுக வழக்கறிஞர் அணி சார்பில் நேற்று நெல்லை நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பார்வையாளர் சோனாலி பொன்ஷே வயங்கங்கரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பதிலுக்கு நெல்லை காங்கிரஸ் வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக வழக்கறிஞர் அணி மற்றும் இந்து முன்னணி சார்பில் இன்று (திங்கட்கிழமை) மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.