தூத்துக்குடி:கோவில்பட்டியில் நேற்று (ஜூன் 2) நடைபெற்ற அகில இந்திய ஹாக்கி போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் புவனேஸ்வர் அணியை வீழ்த்தி போபால் நேஷ்னல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி மகுடம் சூடியது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில், கடந்த மே 24ஆம் தேதி முதல் அகில இந்திய ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வந்தன. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் புகழ்பெற்ற 16 அணிகள் கலந்து கொண்டன.
லீக், காலிறுதி, அரையிறுதி என்று கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வந்த இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் விளையாட, போபால் நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணியும், புவனேஸ்வர் நிஸ்வாஸ் அணியும் தகுதி பெற்று, இறுதிப் போட்டியில் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் 3 - 1 என்ற கோல் கணக்கில் போபால் நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
இதையும் படிங்க: ம.பியில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து; 13 பேர் உயிரிழப்பு! - Madhya Pradesh Tractor Accident
மேலும், புவனேஸ்வர் நிஸ்வாஸ் அணி 2வது இடத்தைப் பெற்றது. முன்னதாக 3, 4 இடங்களுக்கு நடைபெற்ற போட்டியில் நியூ டெல்லி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணியும், பெங்களூர் கனரா வங்கி அணியும் மோதின. இதில் 1:1 என்ற கோல் கணக்கில் சமன் பெற்ற நிலையில் சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டு, அதில் 2:0 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணி வெற்றி பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சாம்பியன் பட்டம் வென்ற போபால் நேஷ்னல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணிக்கு கோப்பை மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இதே போன்று 2, 3, 4-ம் இடம் பிடித்த அணிகளுக்கும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. காலிறுதிப் போட்டி வரை தகுதி பெற்ற நான்கு அணிகளுக்கும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இந்த பரிசளிப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் தாளாளர் அருணாச்சலம் ஆகியோர் பங்கேற்று பரிசுகளை வழங்கினர்.
இதையும் படிங்க: 'MISS WORLD'-க்கு தயாராகும் திருநங்கை ரஃபியா! - Transgender Rafia