நீலகிரி:உதகை அருகே உள்ள மஞ்சூர் எடக்காடு சத்தியமூர்த்தி நகர் பகுதியில் அட்டகாசம் செய்து வந்த கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்துள்ளனர். தொடர்ந்து பிடிப்பட்ட கரடியை வனத்துறையினர் முதுமலை புலிகள் காப்பகம் அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப்பகுதியை கொண்டதாகும். இப்பகுதியில் காட்டு யானை, காட்டெருமை, சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் சமீப காலமாக உணவு மற்றும் குடிநீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் ஊருக்குள் புகுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, அவ்வப்போது மனித வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது. அவ்வாறு வரும் வன விலங்குகள் சில நேரங்களில் அப்பகுதி மக்களை தாக்குவதால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
இந்த நிலையில், சமீப காலமாக மஞ்சூர் அருகே உள்ள எடக்காடு சத்தியமூர்த்தி நகர் பகுதியில் இரவு நேரங்களில் நடமாடி வந்த கரடி ஒன்று, அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ காட்சிகளும் வெளியாகி கடந்த சில நாட்களாக வைரலாகியது.