சென்னை:பாரிமுனையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சியின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, கோஷங்களை எழுப்பினர்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில அலுவலக செயலாளர் தமிழ் மதி, "காவல்துறை மற்றும் தமிழ்நாடு அரசும் எங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இல்லை. இந்த வழக்கில் அரசு சார்ந்தவர்கள் யாரும் இல்லாமல் ரவுடிகளை, புதுமுகங்களை காட்டி திசை திருப்புகிறார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. மேலும், இந்த வழக்கு சரியான திசையில் போகவில்லை என்றும் சந்தேகம் உள்ளது.
மேலும், இந்த வழக்கில் என்கவுண்டர் செய்யப்பட்டவர் யார்? அவர் தான் இதில் முக்கிய சாட்சியாக இருப்பாரோ என்ற சந்தேகம் எங்களது கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கை ரவுடியைப் போல் சித்தரிக்கின்றனர். ஆனால், அவர் தேசிய கட்சியின் மாநிலத் தலைவர், எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். இந்த வழக்கில் தற்போது கைதாகியுள்ள நபர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று தெரிந்ததும், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படும்.