சென்னை:பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஜூலை 5ம் மர்ம கும்பல் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொலை வழக்கில் தற்போது வரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தலைமறைவாக இருக்கும் முக்கிய ரவுடிகளான சம்போ செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்ட ரவுடிகளை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு, அருள், சந்தோஷ் ராமு உள்ளிட்ட 10 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! - goondas act in 10 people
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய அரசியல் பிரமுகர்கள், தொடர்புடைய நபர்கள் மற்றும் குற்றம் சுமத்தப்பட்டு தலைமறைவாக உள்ள நபர்களை விரைந்து கைது செய்யக்கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு கொடுக்க அனுமதி வேண்டி தலைமை செயலகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினர் முதலமைச்சரின் தனி செயலரை சந்தித்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சியினரின் மனு (Credits - ETV Bharat Tamil Nadu) அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பகுஜன் சமாஜ் கட்சி ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன், "ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் தமிழக காவல்துறையின் விசாரனையில் தங்கள் கட்சிக்கு திருப்தியில்லை. கூலிப்படைகளை வைத்து இந்த வழக்கை முடிக்க முயற்சி செய்கின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் அரசியல்வாதிகளுக்கு தொடர்புள்ளது. ஆனால் போலீசார் விசாரணை விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முயல்கின்றனர். ஆகவே ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி முதலமைச்சரை நேரில் சந்தித்து அரசியல்வாதிகள் பட்டியல் கொடுக்க இருப்பதால், அதற்கான நேரம் ஒதுக்க வேண்டும், ஆம்ஸ்ட்ராங் படுகொலையை முறையாக விசாரிக்கவில்லை என்றால் இந்தியா முழுவதும் போராட்டம் செய்வோம் என தெரிவித்தார்.