திருநெல்வேலி:நெல்லை மாவட்டம், பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சேர்வலாறு அணையில், இன்று பெண் யானை குட்டி ஒன்று இறந்து கிடந்ததைப் பார்த்த வனத்துறையினர் உடனடியாக மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர், அந்த யானையின் உடல் மீட்கப்பட்டு, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் இளையராஜா தலைமையில், வனக் கால்நடை மருத்துவர் மனோகரன் மற்றும் பிற மருத்துவர்கள் அடங்கிய வனக் கால்நடை குழுவினர் இன்று உயிரிழந்த பெண் யானை குட்டியை பிரேதப் பரிசோதனை செய்தனர்.
இந்நிலையில், அந்த யானை அப்பகுதியிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், வனத்துறையினர் நடத்திய ஆய்வில் இறந்த பெண் யானை குட்டி கடந்த 3 தினங்களுக்கு முன்பு அணைக்கு மேல் அடர்ந்த வனப்பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி காயங்கள் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
ஏற்கனவே, கடந்த நான்கு தினங்களாக நெல்லை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக நீடித்து வரும் இந்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. இது போன்ற சூழலில் பெண் யானை குட்டி காற்றாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: மீண்டும் உச்சநீதிமன்றம் செல்லும் காவிரி வழக்கு! - தீராத நதிநீர் பிரச்சனை! - TN Cauvery issue