புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை திமுக தெற்கு ஒன்றிய செயலாளரும், ஊராட்சி மன்ற தலைவரான பரமசிவம் என்பவர் செல்போனில் பொதுமக்களை தரக்குறைவாகப் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுகாவிற்கு உட்பட்டது மங்களாகோவில் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி உள்ளது. இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி மூலமாக மேலத்தெரு, குடியான் தெரு பகுதிகளில் வசிக்கும் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
புகார் அளித்த நபரை தகாத வார்த்தைகளால் பேசிய ஊராட்சி மன்றத் தலைவர் (Credits - ETV Bharat Tamil Nadu) இந்நிலையில் ஆழ்துளை மோட்டார் பழுதின் காரணமாக கடந்த ஒரு வார காலமாக குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவதியடைந்த பொதுமக்கள் இது சம்பந்தமாக கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டதற்கு உங்களது பிரச்சனை விரைவில் சரி செய்யப்படும் எனக் கூறியுள்ளார்.
இதனையடுத்து மறுநாள் அதே பகுதியைச் சேர்ந்த அரசப்பன் என்பவர் செல்போன் மூலம் ஊராட்சி மன்ற தலைவரான பரமசிவம் என்பவரிடம் அடிப்படை வசதியான குடிநீர் குறித்து கேட்டுள்ளார். அப்போது அருவருக்கத்தக்க தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாகவும், 'குடிநீர் வரவில்லை என்றால் பஸ் மறியல் செய்யுங்கள்' என்றும் ஏளனமாகப் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று வெளியாகி பொது மக்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொதுமக்களிடம் அருவருக்கத்தக்க ஆபாச வார்த்தைகளால் பேசிய பரமசிவம் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மங்களாகோவில் கிராமத்தில் உள்ள தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்கிட உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என கந்தர்வகோட்டை பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விவகாரம், புகாருக்கு ஆளான ஊராட்சி மன்றத் தலைவர் பரமசிவத்தை நமது செய்தியாளர் தொடர்பு கொள்ள முயன்ற போது அவர் அழைப்பை எடுக்கவில்லை, இது தொடர்பாக பின்னர் அவர் விளக்கம் அளித்தால் அதனை ஈடிவி பாரத் வெளியிட தயராக உள்ளது
இதையும் படிங்க:மூன்று மாதத்தில் பெயர்ந்து விழுந்த அரசுப் பள்ளி சீலிங்.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மாணவர்கள்!