சென்னை: தென்னிந்தியப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், ஜனவரி 26, 27, 29, 30 ஆகிய தேதிகளில், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும், இதனால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இன்று (ஜன.26) வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் உள்ள இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
இதைத் தொடர்ந்து, நாளை (ஜன.27) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. மேலும், ஜனவரி 30 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில், தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.