திருநெல்வேலி: தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் விஜய் அரசியலுக்கு வருவது, அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாகவே இருந்தது. முன்னதாக அவர் தனது ரசிகர் மன்றம் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு செய்து வந்தார். அதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, தான் அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார். கட்சி தொடங்கிய பிறகும் நடிகர் விஜய் மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருகிறார்.
அரசியலில் அடுத்த கட்ட நகர்வாக தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை வரும் 22ஆம் தேதி நடிகர் விஜய் அறிமுகம் செய்யவுள்ளார். இந்நிலையில் திடீரென நேற்று மாலை நடிகர் விஜய், சென்னை, பனையூரில் உள்ள தனது இல்லத்தில் மஞ்சள் நிறத்திலான கட்சிக் கொடியை ஏற்றி வைத்த வீடியோ ஒன்று வெளியானது. இதுகுறித்து கட்சி நிர்வாகிகளிடம் கேட்ட போது அறிமுக விழாவிற்கு ஒத்திகை நிகழ்ச்சியாக இந்த கொடியை விஜய் ஏற்றியதாக கூறினர்.
அதே சமயம் 22ஆம் தேதி நாள் சரியில்லை என்பதால் நேற்று பௌர்ணமி தினத்தில் நடிகர் விஜய் முதல் கட்டமாக கொடியை ஏற்றி வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக புஸ்ஸி ஆனந்த் கட்சி கொடியை வைத்து நேற்று பூஜை செய்ததாகவும் கூறப்பட்டது. மேலும் ஜோதிடம் படி, நல்ல நாள், நேரம் பார்த்து, நடிகர் விஜய் கட்சிக் கொடியை நேற்று ஏற்றி வைத்ததாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதுகுறித்து திருநெல்வேலியைச் சேர்ந்த ஜோதிடர் சங்கர சுப்பிரமணியன் நமது ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "நேற்று(ஆக.19) ஆவணி நட்சத்திரம், 22ஆம் தேதி உத்திரட்டாதி நட்சத்திரம் மற்றும் சந்திரன் மீனத்தில் அமர்ந்திருக்கிறார். சந்திரன் மீனத்தில் ராகுவுடன் சேர்ந்து அமர்ந்திருக்கிறார்.
மேலும் சந்திரனுக்கு பின்னால் சனி அமர்ந்துள்ளதால் வானுமத்திம தோஷம் என்று சொல்வார்கள். வானு என்றால் சந்திரன், இந்த தோஷம் இருக்கும் வேளையில் விஜய்யின் கடக ராசிக்கு அதிபதி சந்திரனும், அன்று ராகுவுடன் சேர்ந்து இருப்பதால் அன்றைய தினம் அவரது கட்சி கொடி ஏற்றும் நிகழ்வு இருந்தால் கண்டிப்பாக அந்த நிகழ்ச்சியே தடைபட்டிருக்கும்.
அதனால் அன்றைய தினம் இல்லாமல், நேற்று கட்சிக் கொடியை ஏற்றியிருக்கலாம். நேற்று நல்ல நாள், நடிகர் விஜய்க்கு மகர லக்கினம். பொதுவாக அனைத்து வண்ணங்களுக்கும் ஒரு சக்தி உண்டு, ஏழு வண்ணங்கள் என்று சொல்வதை போன்று வெள்ளை நிறம் சாந்தியை தரக்கூடியது.