கள்ளக்குறிச்சி: பெண் கிராம நிர்வாக அலுவலர் மீது சாணியை வீசி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்ற பெண் உதவியாளரை போலீசார் தேடி வருகின்றனர். உள்ளூரைச் சேர்ந்த பெண் உதவியாளர் விஏஓ மீது கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் வடக்கனந்தல் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த வடக்கனந்தல் ஊராட்சியின் கிராம நிர்வாக அலுவலர் தமிழரசி (Village Administrative Officer). இவருடைய உதவியாளர் சங்கீதா. உள்ளூரைச் சேர்ந்த சங்கீதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு அலுவலக கணக்கு புத்தகத்தை தனது வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார்.
இதனை தமிழரசி கண்டித்ததால், அவரை சங்கீதா அலுவலகத்தில் வைத்து பூட்டியுள்ளார். இதுதொடர்பாக தமிழரசி அளித்த புகாரில் சங்கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று (பிப்.5) கிராம நிர்வாக அலுவலர் தமிழரசி பணியில் இருந்தபோது, அலுவலகத்திற்கு வந்த சங்கீதா விஏஓ முகத்தில் மாட்டுச்சாணம் வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.