தேனி: மஞ்சளாறு அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதால் ஆற்றில் 566 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மஞ்சளாறு
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து நேற்று காலை முதல் அதிகரித்து, அணையின் நீர்மட்டம் 52 அடியில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கி இன்று காலை 8 மணி அளவில் அதன் முழு கொள்ளளவான 57 அடியில் 55 அடியை எட்டியது.
இதனால் அணைக்கு வரும் நீரை மஞ்சளாறு ஆற்றில் பொதுப்பணித்துறையினர் திறந்து விட்டுள்ளனர். தற்பொழுது அணைக்கு நீர் வரத்து 672 கன அடியாக உள்ள நிலையில் மஞ்சளாறு ஆற்றில் 566 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் மஞ்சளாறு ஆற்றங்கரையோர பகுதிகளான தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, வத்தலகுண்டு, விருவீடு உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ, கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க:"குடிப்பதற்கு தண்ணீர் கூட எடுக்க முடியவில்லை; புகாரளித்தும் நடவடிக்கையில்லை" - தாம்பரம் மக்கள் குமுறல்!
மேலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மஞ்சளாறு ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனவே மஞ்சளாறு அணை அதன் முழு கொள்ளளவான 57 அடியில் 55 அடியாக உள்ள நிலையில், அணைக்கு வரும் நீர்வரத்து 672 கன அடியாகவும், அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 566 கனஅடியாக திறக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கேரளா எல்லை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, இன்று ஒரே நாளில் 7 அடிக்கு மேல் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 152 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 127.65 அடியாக உயர்ந்து காணப்படுகிறது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் நீராதாரமாக விளங்கக்கூடிய இந்த அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து நீர் வரத்து அதிகமாக வந்து கொண்டிருப்பதால் முல்லைப் பெரியாறு ஆற்றங்கரையோர மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.