தஞ்சாவூர்:இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கும்பகோணம் வருகை தந்துள்ளார். அதற்கு முன்னதாக இன்று காலை, இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் டி குருமூர்த்தி இல்லத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத் (credits - ETV Bharat Tamil Nadu) அப்போது அவர், "நீட் தேர்வை இனி யாராலும் ரத்து செய்ய முடியாது என்றும், கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பே நீட் தேர்விற்கு யாரும் விலக்கு கோர முடியாது என்பது முடிவான ஒன்று எனவும் தெரிவித்தார்.
தற்போது அரசியல் காரணங்களுக்காக, நீட் தேர்விற்கு எதிராகவும், நீட் தேர்விற்கு விலக்கு கோரியும், புதிய குற்றவியல் நடைமுறை சட்டத் திருத்தங்களை எதிர்த்தும் திமுக, விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் இந்தியாவில் பிரிவினைவாதம் மற்றும் இந்திய ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பேசி வருவதாகவும் அர்ஜுன் சம்பத் குற்றம்சாட்டினார்.
குறிப்பாக, கோவை - ஊட்டி சாலையில், சுவர்களில் 'நீட் விலக்கு தேவை', 'நீட்டை திணித்தால் இந்தியா துண்டாகும்' என்பன போன்ற வாசகங்கள் காணப்படுகிறது என்றும், சமீபகாலமாக பிரிவினைவாதம் குறித்து பேசுவதும், தமிழகத்தில் பிரிவினைவாத குரல்கள் அதிகரித்துள்ளதும் கண்டிக்கதக்கதாகும் எனவும் கூறினார்.
இதுகுறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மருத்துவப் படிப்பில் சேர பல லட்சம் வேண்டும் என்ற நிலை மாறி, நீட் தேர்வால் எண்ணற்ற ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவு நினைவாகி நிறைவேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், பள்ளி மாணவர்களின் பாராட்டு விழாவில், முதல் கூட்டத்திற்கும், 2வது கூட்டத்திற்கும் இடையே நிறைய வேறுபாடுகள் வெளிப்பட்டது. முதல் கூட்டத்தில், நெற்றியில் பொட்டு எல்லாம் வைத்துக்கொண்டு வந்து, போதைப் பொருட்களை ஒழிக்க பொதுமக்களும் வேலை செய்ய வேண்டும் என்றும், சாராயத்தை அரசு விற்கும் ஆனால் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற விதத்திலும் அவர் பேசினார். அது மக்களிடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தவில்லை.
இந்த நிலையில், நேற்று நடந்த இரண்டாவது கூட்டத்தில், திமுகவின் ஊதுகுழலாக விஜய் மாறிவிட்டதன் அடையாளமாக தான், அவர் நீட் தேர்விற்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்தை ஆதரித்து பேசியுள்ளார் என்று அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
எப்படி சினிமாக்காரர்களான எம்ஜிஆர், டி ராஜேந்தர், விஜயகாந்த் ஆகியோர் கட்சி தொடங்கியபோது திமுக அவர்களுக்கு என்ன என்ன இடையூறுகள் செய்ததோ, நடவடிக்கை எடுத்ததோ அதே நிலைப்பாட்டைத் தான் தற்போது உதயநிதிக்கு போட்டியாக விஜய் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவருக்கு நிர்பந்தம் அளித்துள்ளனர் என்றே தெரிகிறது.
விஜய் மற்றொரு கமல்ஹாசனாகவும், தமிழக வெற்றிக் கழகம், மற்றொரு மக்கள் நீதி மய்யமாகவும் மாறும் என்பது நாங்கள் ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்றுதான்" என்று அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'நடிகர் விஜய்க்கு சரியான சட்ட விழிப்புணர்வு இல்லை! அவநம்பிக்கையை விதைக்கக் கூடாது' - பாஜக நிர்வாகி கடும் தாக்கு!