தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மரையூர் சத்திரத்தின் மோசமான நிலை; பாரம்பரியச் சின்னமாக பாதுகாக்க கோரிக்கை! - MARAIYUR HERITAGE HALL

ராணி மங்கம்மாள், மருது பாண்டியர்களின் வரலாற்றுக்கு ஆதாரமாகத் திகழும் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகில் உள்ள மரையூர் பழமையான சத்திரத்தை தொல்லியல் துறை மீட்டெடுத்து பாதுகாக்க வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ARCHAEOLOGISTS DEMANDED ANCIENT SATRA OF MARAYUR NEAR NARIKUDI
மரையூர் சத்திரத்தை பாரம்பரியச் சின்னமாகப் பாதுகாக்க தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2024, 1:45 PM IST

விருதுநகர்: ராணி மங்கம்மாள் மற்றும் மருது பாண்டியர்களின் வரலாற்றுக்கு ஆதாரமாக திகழும் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகில் உள்ள மரையூர் பழமையான சத்திரத்தை தொல்லியல் துறை மீட்டெடுத்து பாதுகாக்க வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனுஷ்கோடி ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக நாயக்கர் காலம் தொடங்கி சேதுபதிகள், மருது பாண்டியர் பல்வேறு பகுதிகளில் சத்திரங்கள் உருவாக்கினர். அவற்றில் தங்கி உணவு உண்டு செல்லும் வகையில் பல்வேறு வசதிகளுடன் இந்த சத்திரங்கள் அமைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

அதுபோன்று விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மரையூரில் அமைக்கப்பட்ட சத்திரம் மிகப் பாழடைந்து இடியும் நிலையில் உள்ளது. நட்சத்திரத்தை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, அருப்புக்கோட்டை எஸ்.பி.கே கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் ராஜபாண்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது, மரை எனும் மானின் பெயரிலுள்ள இவ்வூரில், பெரிய மண்டபம், தாழ்வாரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ள பழமையான சத்திரம் ஒன்று உள்ளது. மண்டப நுழைவு வாயிலின் மேற்புறம் கஜலட்சுமி சிற்பம் உள்ளது.

சதுரவடிவிலான மண்டபத்தில் நேருக்கு நேராக அமைந்த 8 ஜன்னல்களும், 4 வாசல்களும் உள்ளன. தாழ்வாரத்தில் சிற்பங்கள் உள்ள 7 தூண்கள், மண்டபத்தில் வரிசைக்கு 7 என 6 வரிசைகளில் 42 தூண்கள் என மொத்தம் 49 கல்தூண்கள் உள்ளன. தாழ்வாரத் தூண்களில் நின்ற நிலையில் திருமால், பூக்கள், ஸ்வஸ்திக், அன்னம், வில்லேந்திய ராமர், லிங்கத்தின் இருபுறமும் நாகம் போன்ற பல புடைப்புச் சிற்பங்கள் உள்ளன.

ஒரே மாதிரியான சதுரத்தூண்கள் சத்திரத்துக்கு அழகு சேர்க்கின்றன. தரையில் பெரிய கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. செவ்வக வடிவில் வெட்டப்பட்ட கருங்கற்கள், செங்கல், சுண்ணாம்புச் சாந்து பயன்படுத்தி சத்திரம் கட்டப்பட்டுள்ளது. தாழ்வாரத்தின் தெற்கிலும், மண்டபத்தின் உள்ளே தென்மேற்கு மூலையிலும் ஒரு அறை உள்ளது. மேற்கிலும் இரு அறைகள் இருந்து இடிந்துள்ளன. இந்த அறைகள் சமையலறை, சத்திரப் பொறுப்பாளர் தங்குமிடம், உணவுப் பொருட்கள் வைப்பறை, தங்குபவர்கள் பொருள் பாதுகாப்பறை என இருந்திருக்கலாம்.

கி.பி.1689 முதல் 1706 வரை தனது பேரனான விஜயரங்க சொக்கநாத நாயக்கரின் சார்பாளராக மதுரையை ஆண்டவர் ராணி மங்கம்மாள். இவர் காலத்தில் தான் மரையூர் மற்றும் நரிக்குடி சத்திரங்கள் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

தாழ்வாரத்தில் உள்ள தூண்களில் எதிரெதிரே வணங்கிய நிலையில் இருவர் சிற்பங்கள் உள்ளன. இதில் ஒருவர் பெரியவராகவும், மற்றவர் சிறியவராகவும் காட்டப்பட்டுள்ளது. உருவ அமைப்பு கொண்டு இவை மருதுபாண்டியர் சிற்பங்கள் எனலாம். இதன் மூலம் மருதுபாண்டியர் நரிக்குடி சத்திரத்தை புதுப்பித்து அதற்கு பல ஊர்களை தானமாக கொடுத்ததைப் போல, இந்த சத்திரத்தையும் மராமத்து செய்து, புதிப்பித்து, சிற்பங்கள் உள்ள தூண்களையும் அமைத்துள்ளனர் என அறிய முடிகிறது. இதில் பெரிய மருது சிற்பம் சேதமடைந்துள்ளது.

சத்திரத்தின் வடமேற்கில் கூரைப் பகுதி இடிந்து விழுந்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு இது பள்ளியாக இருந்துள்ளது. தற்போது பயன்பாட்டில் இல்லாததால், இதன் மேற்பகுதியிலும், சுற்றிலும் மரங்கள் வளர்ந்துள்ளன. வரலாற்றுக்கு ஆதாரமாக உள்ள இச்சத்திரத்தில் வளர்ந்துள்ள மரங்களை அகற்றி, பழுதுநீக்கி பாரம்பரியச் சின்னமாகப் பாதுகாக்க வேண்டும் என அரசைக் கேட்டுக்கொள்வதாக ராஜகுரு தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.

ABOUT THE AUTHOR

...view details