தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதல்வர் மருந்தகம் அமைக்க விரும்புவோர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்...தமிழ்நாடு அரசு அறிவிப்பு! - MULTAVAR DISPENSARY

முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் வரும் 2025 ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு (Image credits-ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2024, 9:16 PM IST

சென்னை: முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினவிழா உரையில், “பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்“ என்று அறிவித்தார்.

இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக கடந்த அக்டோபர் 29ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள், மாவட்ட மருந்து சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம் ஆகியோருக்கு உரிய அறிவுரைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதையும் படிங்க:தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு

முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும். மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்கால் மற்றும் யுனானி மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் மற்றும் நியூட்ராசூட்டிக்கல்ஸ் உள்ளிட்ட மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள B-Pharm / D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் கூட்டுறவுத்துறை மூலம் www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்யும் வழிமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் திட்ட விவரங்கள் மேற்படி இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் மூலம் முதல்வர் மருந்தகங்கள் உருவாக்கப்பட்டு, வரும் 2025 ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.

ABOUT THE AUTHOR

...view details