தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உதவித்தொகை; நவ.30 முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு! - TRUST TEST APPLICATION DATE

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான திறனாய்வு தேர்விற்கு நவம்பர் 30ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2024, 6:25 PM IST

சென்னை:அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான திறனாய்வு தேர்விற்கு (TRUST Test) நவம்பர் 30ஆம் தேதி முதல் டிச.09ஆம் தேதி வரையில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர் லதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அரசு பள்ளிகளில் 2024-2025ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு 25.01.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 2024-2025ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இத்தேர்வில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவியர்கள் என மொத்தமாக 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு மாதத்திற்கு ரூ.1000 வீதம் ஒரு கல்வியாண்டில் ரூ.10,000 வழங்கப்படும்.

இதையும் படிங்க:அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் உஷா கிம்-க்கு அமெரிக்க விருது!

தமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளில் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறிவகையில் தேர்வு இருதாள்களாக நடத்தப்பெறும். முதல் தாளில் கணிதம் தொடர்புடைய வினாக்கள் 60 இடம் பெறும். அதேபோல இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்புடைய வினாக்கள் 60 இடம் பெறும். முதல் தாள் காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், இரண்டாம் தாள் மதியம் 2 மணி முதல் 4 வரையிலும் நடைபெறும்.

மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை நவம்பர் 30ஆம் தேதி முதல் டிசம்பர் 9ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.30 சேர்த்து டிசம்பர் 9ஆம் தேதிக்குள் மாணவர்கள் படிக்கும் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details