சென்னை:சென்னை திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் வரை இயக்கப்பட்ட மாநகரப் பேருந்து, அரும்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது, இருக்கையின் கீழ் இருந்த பலகை திடீரென உடைந்து விழுந்தது. அப்போது, அந்த இருக்கையில் அமர்ந்திருந்த பெண் சறுக்கி, அந்த ஓட்டை வழியாக கீழே விழுந்தார்.
அப்போது அந்த ஓட்டையின் வழியே சிறிது தூரம் பயணித்த அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, ஓட்டுநர் பேருந்தை உடனடியாக நிறுத்தியதால் நல்வாய்ப்பாக அவர் சிறிய காயத்துடன் உயிர் தப்பினார். இதனையடுத்து, அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார்.
இந்த விபத்து தொடர்பாக பேசின் பிரிட்ஜ் பேருந்து பணிமனையின் கிளை மேலாளர், தொழில்நுட்ப பொறியாளர் மற்றும் பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், விபத்து குறித்து செய்தித்தாள்களில் வெளியான செய்தியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் காண்பித்து, வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் என்பவர் அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என முறையீடு செய்தார். மேலும், போக்குவரத்துத் துறையின் அலட்சியத்தின் காரணமாகவே இந்த விபத்து நடந்துள்ளதாக கூறினார். பின்னர் நீதிபதிகள், இது குறித்து பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:அரசியல் வருகையை மறைமுகமாக அறிவித்த நடிகர் விஷால்.. அறிக்கையில் கூறியது என்ன?