கன்னியாகுமரி: பூதப்பாண்டி பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் பாலசுப்பிரமணியம் (55). இவர் ஆரல்வாய்மொழியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரிடம் திட்டுவினை பகுதியை சேர்ந்த சுந்தரம்(67) என்பவர் தனது தாயார் பெயரில் உள்ள பூர்வீக சொத்தில் உள்ள வீட்டின் உரிமையை தனது பெயருக்கு மாற்ற கோரி கடந்த ஜனவரி 3ஆம் தேதி விண்ணப்பித்து உள்ளார். ஆனால் பூதப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் அவரது விண்ணப்பத்தை கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.
இந்நிலையில் சுந்தரம் பூதப்பாண்டி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியத்தை நேரில் சந்தித்து விவரம் கேட்ட போது 10 ஆயிரம் ரூபாய் தந்தால் மட்டுமே வீட்டின் உரிமையை பெயர் மாற்றம் செய்து தர முடியும் என்று கண்டிப்பான முறையில் கூறியுள்ளார். இதனை கேட்ட சுந்தரம் அதிர்ச்சி அடைந்து, லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜிடம் புகார் அளித்துள்ளார். லஞ்சம் கேட்ட அதிகாரியிடம் காலையில் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து பணத்தை தருவதாக சுந்தரம் கூறி அங்கிருந்து சென்றுள்ளார்.
ஆனால் சுந்தரம் நேரில் பணம் கொடுக்க செல்லாமல் நேற்று காலை பாலசுப்ரமணியம் சுந்தரத்தை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் நான் கேட்ட பணத்தை ஏன் கொடுக்கவில்லை என கேட்டுள்ளார். மேலும் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிகாரிகளின் திட்டத்தின் படி அரசு அதிகாரி பேசியது அனைத்தும் சுந்தரத்தின் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டது.
அதன் பின்னர் உடனே மாலை 3 மணிக்கு பணத்துடன் அலுவலகத்திற்கு வந்து நேரில் தருவதாக சுந்தரம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கூறியுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுந்தரத்திடம் ரசாயன பவுடர் தடவிய 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து, அதனை செயல் அலுவலரிடம் கொடுக்கும்படியும் கூறி உள்ளனர்.
அதன்படி சுந்தரம் பூதப்பாண்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று, அங்கிருந்த பாலசுப்பிரமணியத்திடம் லஞ்ச பணத்தை கொடுத்துள்ளார். அப்போது ஏற்கனவே அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் திடீரென அந்த அலுவலகத்திற்குள் நுழைந்து, அங்கு லஞ்ச பணத்துடன் இருந்த பாலசுப்பிரமணியத்தை மடக்கிப் பிடித்தனர். தான் கையும் களவுமாக சிக்கியதை அறிந்த செயல் அலுவலர் அவர் பதற்றம் அடைந்தார்.
பின்னர் அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் அலுவலகத்திலேயே சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். இதனைதொடர்ந்து அலுவலகத்திலும், ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள செயல் அலுவலர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து பாலசுப்பிரமணி கைது செய்தனர். பூதப்பாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பேரூராட்சி செயல் அலுவலரை லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஷேர் மார்க்கெட்டில் பெரும் நஷ்டம்; திருட்டில் இறங்கிய இளைஞர்.. குமரி கொள்ளை சம்பவத்தில் வெளிவந்த பகீர் தகவல்!