சென்னை:வேளாண் சாகுபடியின் கீழ் காளான் வளர்ப்பு மேற்கொள்வது தொடர்பாக தமிழக அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் வெள்ளை மொட்டுக் காளான், பால் காளான், சிப்பிக்காளான் வகைகள் வேளாண் சாகுபடியின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, உண்ணக்கூடிய காளான் வகைகளின் வளர்ப்பு வேளாண் செயல்பாடாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் 22 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாட்டில் ஊட்டச்சத்துகள் நிறைந்த உண்ணக்கூடிய வெள்ளை மொட்டுக் காளான், பால் காளான், சிப்பிக் காளான் போன்ற காளான் வகைகளின் வளர்ப்பானது வேளாண் செயல்பாடாக அறிவிக்கை செய்யப்படும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கூறப்பட்டிருந்த நிலையில், இன்று இதுதொடர்பான அறிவிப்பு தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
விவசாயிகள், காளான் வளர்ப்போர் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிலமற்ற விவசாயிகளும் காளான் வளர்ப்பில் ஈடுபட்டிருப்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய, மாநில, வேளாண், வேளாண் சார் அமைப்புகள் நடத்திய ஆய்வில், காளான் வகைகள் காய்கறிகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளன.