கோயம்புத்தூர்: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கச்சத்தீவு விவகாரம் தொடர்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற ஆவணங்களை நேற்று (மார்ச்.31) வெளியிட்டார். அதில், 1974இல் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியிலிருந்த போது கச்சத்தீவு இலங்கைக்கு ஒரு பகுதியாகக் கொடுக்கப்பட்டது எனவும், இது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சம்மதத்துடன் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஏப்.1) செய்தியாளர்களிடம் பேசுகையில், "கச்சத்தீவை தங்களுக்கு வழங்க வேண்டும் என 1948 முதல் இலங்கை அரசு இந்தியாவிற்குக் கோரிக்கை வைத்தது. இதனையடுத்து 1974இல் இந்திரா காந்தி தலைமையிலான ஆட்சியில் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கி ஒப்பந்தம் போடப்பட்டது.
கச்சத்தீவு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சம்மதத்துடன் இலங்கைக்கு வழங்கப்பட்டது. கருணாநிதி அப்போது நான் பெயருக்கும், அரசியல் ஆதாயத்திற்கும், கச்சத்தீவு தொடர்பாகப் பெரிய போராட்டம் எதுவும் நடக்காமல் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறேன் எனக்கூறி கச்சத்தீவை வழங்கச் சம்மதம் தெரிவித்துள்ளார்.
அவர் அப்போது எதிர்ப்பு தெரிவித்திருந்தால் கச்சத்தீவு தற்போது இலங்கை வசம் இருந்திருக்காது. இதனையடுத்து நாடகத்திற்காகக் கருணாநிதி கச்சத்தீவை மீட்க வேண்டும் என மத்திய அரசுக்கு 21 முறை கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ், திமுக கட்சியினர் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் துரோகம் செய்துள்ளது. கச்சத்தீவைக் கொடுத்தது, அருணாச்சல பிரதேசத்தின் ஒரு பகுதியைச் சீனாவிற்குக் கொடுத்தது என காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது எதாவது ஒரு பகுதியைத் தாரை வார்த்து விடுவார்கள்.
2014 முன்பு வரை மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்குக் காங்கிரஸ் தான் காரணம். அதே போல் கச்சத்தீவு இலங்கை வசம் உள்ளதால் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்கச் செல்லும் போது எல்லை பிரச்சனை ஏற்படுகிறது. தமிழக கடல் எல்லை சுருங்கியதால் ஆழ்கடலில் தமிழக மீனவர்களுக்கு போதுமான மீன்கள் கிடைப்பதில்லை. கச்சத்தீவைத் தாரை வார்த்துவிட்டு 45 வருடங்களுக்கு மேலாக திமுக கச்சத்தீவை மீட்போம் என நாடகம் நடத்தி வருகிறது.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியது போல, மத்திய பாஜக அரசு கச்சத்தீவை மீட்க அனைத்து வழிகளையும் ஆராய்ந்து வருகிறது. பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது படி, கச்சத்தீவை மீட்போம். வங்கதேசத்துடன் உள்ள எல்லை குழப்பங்களைத் தீர்க்க சில பகுதிகள் கொடுக்கப்பட்டது. வங்கதேச பிரச்சனையும், கச்சத்தீவு பிரச்சனையும் ஒன்றல்ல. சரித்திரம் தெரியாமல் மல்லிகார்ஜூன கார்கே பேசுகிறார்.