வேலூர்:வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று “என் மண் என் மக்கள்" நடைபயணம் மேற்கொண்டார். நடைபயணத்தின்போது பொதுமக்களிடைய பேசிய அண்ணாமலை, “வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் விளையும் இளவம்பாடி முள் கத்திரிக்காய்-க்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியது. இதன் காரணமாக, உலக அளவில் இளவம்பாடி முள் கத்திரிக்காய் புகழ் பெற்றுள்ளது.
இதேபோல, ஒடுக்கத்தூர் பகுதியில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் டன் கொய்யாப்பழம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் கொய்யா பழத்திற்கு புவிசார் குறியீடு வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் காரணமாக,
கொய்யா பழத்திற்கு புவிசார் குறியீடு வழங்க பாஜக முயற்சி எடுக்கும்.
அழிவின் விழிம்புக்குச் சென்ற அணைக்கட்டு அருகே உள்ள நாக நதியை மீட்டு எடுத்தவர்கள் இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள்தான். இதனை பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய மன்கி பாத் நிகழ்ச்சியில் பேசினார். ஆயிரம் ஆண்டு பழமையான பள்ளி கொண்ட ரங்கநாதர் கோயிலில், அறநிலையத்துறை பணிகளை சரியாக செய்வதில்லை.
தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகளில் காமராஜர் செய்ததை, அதற்கு பின்பு வந்த எந்த முதல்வரும் செய்யவில்லை. 31 மாதத்தில் தமிழகத்தில் 31 லட்சம் பேர் தேர்வெழுதி, 10 ஆயிரம் பேருக்கு மட்டும்தான் அரசு வேலை கிடைத்துள்ளது. ஆனால், மத்திய அரசு 500 நாட்களில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கியுள்ளது.
திமுக சொன்னது 5 ஆண்டில் மூன்று லட்சம் பேருக்கு அரசு வேலை என, ஆனால் தற்போது வரை 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கியுள்ளது. குரூப் 1 தேர்வு எழுதியவர்களுக்கு இன்னும் முடிவு வரவில்லை. 2026இல் பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வந்தால், இதுவரை அரசு வேலைக்கு செல்லாத குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “யாரெல்லாம் மணல் கொள்ளையில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ அவர்களை அமலாக்கத்துறை விடாது. தமிழ்நாட்டில் மணல் கொள்ளையின் தலைநகரமே வேலூர் மாவட்டம்தான். பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூரில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக பரவலாக பேசப்படுகிறது. ஆனால், ஏன் அண்ணாமலை கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட வேண்டும்? நான் ஏன் வேலூர் தொகுதியில் போட்டியிடக் கூடாது? நானும் வேலூர்காரன்தான்.