சென்னை: சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் தமிழக அரசின் தொல்லியியல் துறை சார்பில் சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கலந்துக் கொள்வதற்கு பல்கலைக்கழகம், கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். பொதுவாக அரசு நிகழ்ச்சிகளுக்கு வருபவர்கள் கருப்பு நிறத்தில் துணி அணிந்திருந்தால் அதனை காவல்துறையினர் அகற்றியப் பின்னரே அனுமதிப்பது வழக்கமானது.
இந்நிலையில், சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் இன்று நடந்த சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கு தொடக்க விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்.
அப்போது இந்த நிகழ்ச்சிக்கு கருப்பு நிற துப்பட்டாவை அணிந்து வந்த மாணவிகளிடம் அந்த துப்பட்டாவை நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னரே வாங்கி வைத்தனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்த பின்னரே அவர்களுக்கு அந்த துப்பட்டாக்கள் ஒப்படைக்கப்பட்டது. கருப்பு நிற துப்பட்டா அணிந்து வந்த மாணவிகளிடம் துப்பட்டா கைப்பற்றப்பட்டு அரங்கிற்குள் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.