சென்னை:சூரிய சக்தி விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு, இந்திய அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர்களுக்கு மேல் லஞ்சம் கொடுத்துள்ளதாக அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி மீது அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், லஞ்சம் கொடுத்ததாக பட்டியலிடப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடும் இருப்பதால் தமிழக அரசு மீது கேள்விகள் எழ தொடங்கியுள்ளன. இந்நிலையில், அதானி ஊழலில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு உள்ள பங்கு குறித்தும், அதானியுடனான ரகசிய சந்திப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் வைத்துள்ளார்.
அதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; '' அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிக் கொண்டிருக்கும் அதானி ஊழலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றிருப்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக வலியுறுத்தியிருப்பது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பதட்டம் அடைந்திருக்கிறார்.
'' ராமதாசுக்கு வேறு வேலை இல்லாததால் தினமும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கெல்லாம் நான் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது’’ என்று கொந்தளித்திருக்கிறார். இதைக் கேட்டவுடன் இப்படி ஒரு முதலமைச்சரை பெறுவதற்கு தமிழகம் என்ன புண்ணியம் செய்ததோ? என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
இதையும் படிங்க: வங்கக்கடல் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. டெல்டா மாவட்டங்களுக்கு நாளை முதல் அதிகனமழை எச்சரிக்கை!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அளவுக்கு பதட்டம் அடைந்திருக்கத் தேவையில்லை. தமிழ்நாட்டின் மானம் அமெரிக்காவில் கப்பலேறிக் கொண்டிருக்கிறது. இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுமானால் எந்த கவலையும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டின் பொறுப்புள்ள குடிமகனாகவும், அரசியல் கட்சியின் நிறுவனராகவும் ராமதாசுக்கு அக்கறை இருக்கிறது. அதனால் தான் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.
அதானி குழுமத்தின் தலைவர் அதானியும், அவரது புதல்வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவரது சென்னை இல்லத்தில் சந்தித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது. இது குறித்தும், அதானியுடனான சந்திப்பு அலுவல் பூர்வமானதா, தனிப்பட்ட முறையிலானதா? என்பது குறித்து தமிழக மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டியது முதலமைச்சர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் கடமை தானே? தமிழ்நாடு ஒன்றும் அவர்களின் குடும்ப சொத்தும் இல்லை. தமிழ்நாட்டில் பதிவான வாக்குகளில் வெறும் 40 விழுக்காட்டினரின் ஆதரவை மட்டுமே பெற்று முதலமைச்சர் பதவிக்கு வந்தவர் தான் ஸ்டாலின் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும். அதிகாரம் நிரந்தரமானது அல்ல. அதானி ஊழலில் மின்சார வாரியத்திற்கு உள்ள தொடர்பு குறித்து பதில் கூறித்தான் ஆக வேண்டும்.
பதவி வரும் போது பணிவும் வரவேண்டும், துணிவும் வர வேண்டும் என்பார்கள். மு.க.ஸ்டாலினுக்கு எதுவுமே வரவில்லை. ராமதாஸ் குறித்து தெரிவித்த கருத்துகளுக்காக அவர் பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். அதானி ஊழலில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு உள்ள பங்கு குறித்தும், அதானியுடனான ரகசிய சந்திப்பு குறித்து ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும். அதானி ஊழலில் மின்சார வாரியத்திற்கு உள்ள பங்கு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை நடத்துவதற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட வேண்டும்'' என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்