தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளிக்கு தனியார் பேருந்துகள் வாடகை; அரசு கூறும் காரணத்தை ஏற்க முடியாது - அன்புமணி, டிடிவி கண்டனம்!

தீபாவளிக்கு தனியார் பேருந்துகள் வாடகைக்கு இயக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது தனியார்மயமே. இதனை போக்குவரத்துத்துறை கைவிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் தெரிவித்துள்ளனர்.

டிடிவி தினகரன், அமைச்சர் சிவசங்கர், அன்புமணி ராமதாஸ்
டிடிவி தினகரன், அமைச்சர் சிவசங்கர், அன்புமணி ராமதாஸ் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 22, 2024, 3:38 PM IST

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 14 ஆயிரத்து 86 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

மேலும், "பயணிகளின் வசதிக்காக தனியார் பேருந்துகளை வாடைகைக்கு அமர்த்தியும் இயக்க உள்ளதாகவும், பேருந்துகளை வாடகைக்கு எடுப்பதற்கு வெளிப்படையான டெண்டர் விடப்பட்டு, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.51.25 பைசா என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் அரசுப் பேருந்தில் கொடுக்கும் கட்டணத்தையே, தனியார் பேருந்திலும் கொடுப்பதால் பொது மக்களுக்கு எந்த சிரமமும் இருக்காது. தனியார் பேருந்துகள் அவரவர் ஓட்டுநரை வைத்து இயக்குவார்கள். ஏற்கனவே, தமிழ்நாடு முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கும் தனியார் பேருந்துகளின் ஸ்பேர் பஸ் எடுத்து இயக்கப்படும். ஏற்கனவே ஒட்டிக்கொண்டிருக்கும் ஓட்டுநர் இயக்குவதால் எந்த பிரச்சனையும் கிடையாது. அரசு ஏற்பாடு என ஒரு ஸ்டிக்கர் மட்டும் ஒட்டப்படும்" என தெரிவித்தார்.

இந்நிலையில், தீபாவளிக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது தனியார்மயமே என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கப்படுவதாகவும், அதற்காக தனியார் பேருந்துகளுக்கு கி.மீக்கு ரூ.51.25 வீதம் வாடகை வழங்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். இது மிகவும் ஆபத்தான முயற்சி. தனியார் மயத்துக்கு வழிவகுக்கும் இந்தத் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.

மக்கள் வசதிக்காக போர்வைக்குள் மறைந்து கொண்டு தனியார் பேருந்துகளை அரசின் சார்பில் இயக்குவதை அனுமதிக்க முடியாது. அரசுத் தரப்பில் கூறப்படும் காரணங்களும், விளக்கங்களும் அப்பட்டமான பொய். ஒப்பந்த முறையில் (Gross Cost Contract) இந்தப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் போதிய பேருந்துகள் இல்லை என்பதால் தான் தனியார் பேருந்துகளை இயக்க ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகிறது என்று தமிழக அரசின் சார்பில் கூறப்படும் காரணத்தை ஏற்க முடியாது.

இதையும் படிங்க:தீபாவளி பண்டிகை: சொந்த ஊர் செல்வோருக்கு அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்!

தனியார் பேருந்துகளை போக்குவரத்துக் கழகங்களில் திணிக்க வேண்டும் என்பதற்காக, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் போதிய எண்ணிக்கையில் பேருந்துகள் இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 8 ஆயிரத்து 182 புதிய பேருந்துகளை வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. அரசு நினைத்திருந்தால் அந்த பேருந்துகளை எப்போதோ வாங்கியிருக்கலாம். ஆனால், மூன்றரை ஆண்டுகளில் 1,088 புதிய பேருந்துகள் மட்டுமே வாங்கப்பட்டன.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு காலாவதியான பேருந்துகளின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கு அளவுக்குக் கூட புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை. அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரப்பாமல் மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஒப்பந்தப் பணியாளர்களை மட்டும் அரசு நியமித்திருக்கிறது. இவை அனைத்தும் தனியார்மயமாக்கத்திற்கான முன்னேற்பாடுகள்.

பயணிகள் சேவையையும், நிர்வாகத்தையும் மேம்படுத்துவதன் மூலம் அரசுப் போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து திருவிழாக் காலங்களில் சிறப்புப் பேருந்துகளாக இயக்க தனியார் பேருந்துகளை ஒப்பந்தம் செய்யும் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர் விரோத செயல்களில் அரசு ஈடுபடக்கூடாது” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், தீபாவளி உட்பட பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் முடிவை போக்குவரத்துத்துறை கைவிட வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வொரு ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் புதிய பேருந்துகள் வாங்குவதற்காக ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தி புதிய பேருந்துகளை வாங்க முன்வராத திமுக அரசு, தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து அப்பேருந்துகளின் ஓட்டுநர்களை வைத்தே இயக்க முயற்சிப்பது அப்பட்டமான தொழிலாளர் விரோதப் போக்கு.

போக்குவரத்துக் கழகங்களுக்கு தனியார் நிறுவனங்களின் மூலம் ஆட்சேர்ப்பு, ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நியமனம் வரிசையில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவதும் போக்குவரத்துத்துறையை தனியார் மயமாக்கும் முயற்சியே என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

எனவே, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் தொழிலாளர் விரோதப் போக்கை உடனடியாக கைவிடுவதோடு, ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தி புதிய பேருந்துகளை வாங்கி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details