திருச்சி: தமிழக பாடநூல் கழகம் சார்பாக வெளியிடப்படும் அனைத்து புத்தகங்களையும், தமிழகம் முழுவதும் உள்ள இடங்களில் விற்பனைக்கு கொண்டு செல்லும் வகையில், திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள ராசி பப்ளிகேஷன், சுமதி பப்ளிகேஷன் ஆகிய இரு புத்தகக் கடைகளின் ஸ்டால்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திறந்து வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில், தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பாக பல்வேறு நூல்களை மொழி பெயர்த்துள்ளோம். பிற மாநிலங்களைச் சார்ந்த நூல்கள் உள்பட 350க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்துள்ளோம்.
மொழி பெயர்த்துள்ள நூல்களை குறைந்தது 100 இடங்களுக்காவது கொண்டு சென்று, ஸ்டால்கள் அமைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். பொதுமக்கள் டிபிஐ (DPI) வளாகத்திற்கு வந்து நூல்களை வாங்குவதைக் காட்டிலும், புதிது புதிதாக வரும் நூல்களை மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என ஆசைப்பட்டோம். குறிப்பாக, யாரும் பார்த்திராத வ.உ.சியின் வாழ்க்கை வரலாறு புகைப்படங்களை தொகுப்பாக கொண்டு நூலாக வெளியிட்டுள்ளோம்.
சென்னையில் ஹிக்கிம்பாதம்ஸ் புத்தக நிலையத்தில் ஸ்டால் அமைத்துள்ளோம். அடுத்ததாக, தமிழ்நாட்டில் பழமை வாய்ந்த புகழ்பெற்ற திருச்சியின் சிங்காரத்தோப்பு பகுதியில் ராசி மற்றும் சுமதி புத்தக நிலையங்களில் 2 ஸ்டால்களை அமைத்துள்ளோம். இதேபோல், தமிழகம் முழுவதும் 100 இடங்களில் கொண்டு செல்ல உள்ளோம்.