சென்னை: தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம், இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி சாரண சாரணியர் மாநில ஆனையரும், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை இயக்குனருமான அறிவொளி பேசியதாவது, “இந்த பொதுக்குழு கூட்டம் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது. பள்ளிக்கல்வித்துறையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வந்த பிறகு எமிஸ் (EMIS) வலைத்தளத்தில் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
ஜாம்புரி என்ற சாரண சாரணியர் இயக்க வைர விழா நடைபெற உள்ளது. இவ்வாறு நடைபெற உள்ள வைர விழா, ஜாம்புரி நிகழ்ச்சி வைர விழா நிகழ்வாக மட்டுமின்றி, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவாகவும் நடக்கும். மணப்பாறை சிப்காட் தொழிற்பூங்கா பகுதியில் வைர விழா ஜாம்புரி நிகழ்வு நடைபெற உள்ளது. இதற்கு நூற்றாண்டு விழா சிறப்பு ஜாம்புரியாக பெயர் வைக்க மத்தியில் அனுமதி கிடைத்துவிட்டது. சர்வதேச ஜாம்புரி நிகழ்வாக நடைபெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத்தொடர்ந்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “ பாரத சாரணர் இயக்கத்தின் வைர விழாவை சிறப்பாக கொண்டாடுவதன் மூலம் தமிழகத்தின் பெருமையை உலகம் முழுவதும் நிலைநாட்ட ஒரு நல்ல வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. தற்கட்டமாக 38 நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அதற்கான பதிலைப் பொறுத்து விழாவை தேசிய அல்லது சர்வதேச அளவில் நடத்துவது குறித்து முடிவு செய்வோம்.