சேலம்: வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று அதன் பரிசீலனை நடைபெற்றது. அந்த வகையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனைக் கூட்டம், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தா தேவி தலைமையில் இன்று பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது.
இதில் பங்கேற்க வந்த பாமக வேட்பாளர் அண்ணாதுரையின் காரை பறிமுதல் செய்ய போலீசார் முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் காவல்துறையினரிடம் வேட்பாளர் அண்ணாதுரை மற்றும் உடன் வந்த பாமகவைச் சேர்ந்த நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. வேட்பாளரின் காரில் தேர்தல் ஆணைய படிவத்தை ஒட்டவில்லை எனக் கூறியும், காரில் உள்ள கட்சிக் கொடியை அகற்றக் கூறியும் போலீசார் காரை பறிமுதல் செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.